- திருவள்ளூர் மாவட்டம்
- அமைச்சர் நாசர்
- Poonamalli
- தாயுமானவர்
- வடக்கு மாடவீதி
- கூட்டுறவு நியாய விலைக் கடை
- திருவேர்காடு நகராட்சி
பூந்தமல்லி, ஆக. 13: திருவள்ளூர் மாவட்டத்தில் 51,853 பயனாளர்களுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருள் வழங்கப்படவுள்ளது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். திருவேற்காடு நகராட்சி வடக்கு மாடவீதி, கூட்டுறவு நியாய விலைக்கடை பகுதியில் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கினார். திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சண்முகவள்ளி, துணைப்பதிவாளர் பாலாஜி, கூட்டுறவு சார் பதிவாளர்கள் கலைவாணி, மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திட்ட வாகனங்களின் சேவையையும் அமைச்சர் நாசர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நாசர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் 1,102 நியாயவிலைக் கடைகளில் 37,990 குடும்ப அட்டைகளில் உள்ள 47,193 முதியோர்களும், 3,441 குடும்ப அட்டைகளில் உள்ள 4,660 மாற்றுத்தினாளிகளும் என மொத்தம் 41,431 குடும்ப அட்டைகளில் உள்ள 51,853 பயனாளர்களுக்கு இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்திற்காக நியாய விலைக்கடைகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு நகர்புற பகுதியில் செயல்படும் 124 நியாய விலைக்கடைகளை ஒருங்கிணைத்து 80 குழுக்களாகவும், கிராமப்புற பகுதியில் செயல்படும் 978 நியாய விலைக்கடைகளை ஒருங்கிணைத்து 474 குழுக்களாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கடைகள் செயல்பட ஏதுவாக ஊரகப்பகுதியில் 567 வாகனங்கள் மற்றும் நகர்ப் பகுதியில் 111 வாகனங்கள் என மொத்தம் 678 வாகனங்கள் மூலமாக குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. இவ்வாறு கூறினார். இந்த நிகழ்ச்சியில் திருவேற்காடு நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன், திமுக நிர்வாகிகள் பவுல், சங்கர், இளங்கோவன், உமாபதி, இளையராஜா, சுதாகர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
