×

முதல்வர் வெளியிட்டுள்ள மாநில கல்விக் கொள்கை குறித்து தமிழகம் முழுவதும் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சி: திமுக மாணவர் அணி அறிவிப்பு

சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கை: மாணவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்பதை மாநிலக் கொள்கையில் சேர்த்து வெளியிட்டிருப்பது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும், நம் முதல்வர் கொடுத்த சிறந்த பரிசு. தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக 1 முதல் 8ம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’ என அறிவித்திருப்பது ஆகச் சிறந்த செயல்திட்டம். இந்தச் செயல்திட்டம் இடைநிற்றலை குறைக்கும். இருமொழி கொள்கையில் தான் தமிழ்நாடு எப்போதும் இருக்கும் என உறுதிபட தெரிவித்திருப்பது இந்தியைத் திணித்து இந்திய ஒன்றியத்தின் பன்மொழித் தத்துவத்தைச் சிதைக்கத் துடிக்கும் ஒன்றிய அரசுக்கு முதல்வர் கொடுத்த சவுக்கடி.

நம்முடைய கல்விக் கொள்கையைப் பின்பற்றி இனி மற்ற மாநிலங்கள் அவர்களுக்கென பிரத்தியேக கல்விக் கொள்கையை உருவாக்குவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தேசியக் கல்விக் கொள்கை எனும் ஒன்றிய அரசின் நயவஞ்சகத்துக்குப் பதிலடியாக மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்றதுணையாக இருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அதைச் செயல்படுத்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் மாணவர் அணி சார்பில் நன்றியை உரித்தாக்குகிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையை கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள், துண்டுபிரசுரங்கள், போஸ்டர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாணவர் அணி கொண்டு சேர்க்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chief Minister ,DMK ,Chennai ,Rajiv Gandhi ,Tamil Nadu government ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...