திருமங்கலம்: மதுரையில் தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21ம் தேதி மதுரையை அடுத்த பாரபத்தியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அனுமதி அளிக்க காவல்துறை எழுப்பிய 42 கேள்விகளுக்கு தவெக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே மாநாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காவல்துறையிடம் விளக்கம் கொடுத்து ஒரு வார காலம் ஆனதையடுத்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று திருமங்கலம் ஏஎஸ்பி அன்சுல் நாகர், இன்ஸ்பெக்டர் சுப்பையா ஆகியோரை சந்தித்தார். அப்போது மாநாட்டிற்கான அனுமதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்ேபாது, ‘‘பார்க்கிங், போக்குவரத்து வசதி உள்ளிட்ட முக்கிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மாநாட்டு பணிகள் 70 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது’’ என்றார்.
