மதுரை, ஆக. 9: ஒன்றிய அரசின் இ-சலான் செயலி என்பது அதிக வேகம், சிவப்பு விளக்கு தாண்டுதல் அல்லது செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறியதற்காக போக்குவரத்து அதிகாரிகளால் வழங்கப்படும் டிஜிட்டல் போக்குவரத்து அபராதமாகும். இ-சலான் அமைப்பு மோட்டார் வாகனச் சட்டம், 1988ல் இடம் பெறுகிறது.
மேலும் டிஜிட்டல் இணக்கம் மற்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்க முயற்சியாக 2016ம் ஆண்டு முதல் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இ-சலான் மூலம் தேசிய அளவில் தமிழகத்திலிருந்து அதிகளவு அபராத தொகை செலுத்தப்படுவதாக தெரிகிறது.
ஆனாலும் இந்த இ-சலானில் தமிழுக்கு இடமில்லாத நிலை உள்ளது. ஆனால் பொது மொழியான ஆங்கிலம் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நடவடிக்கை தமிழ் ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இ-சலானில் தமிழ் மொழியை இடம் பெறச் செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
