×

சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி

புதுடெல்லி: மக்களைவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்வியில்,“ தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, காஷ்மீர், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுலாத்துறையை மீட்கத் தேவையான நிதி உதவியும் சிறப்பு திட்டங்களையும் ஒன்றிய அரசு அளித்துள்ளதா?. கோவிட் 19 தாக்குதலில் இருந்து விடுபட சுற்றுலாவுக்கு என்னென்ன நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? என்று கேட்டிருந்தார். இதையடுத்து அதற்கு பதிலளித்த ஒன்றிய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அளித்த பதிலில்,” சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கான அடிப்படைப் பொறுப்பு மாநில அரசுகள் வசம் இருந்த போதிலும், ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்கள் வாயிலாக நிதி உதவி வழங்கி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ.354 கோடி நிதி.

2014-15 முதல் அனைத்து மாநிலங்களிலும் கடற்கரை சர்க்யூட், தலைசிறந்த சுற்றுலா தலங்கள் மேம்பாடு, போன்ற திட்டக் கூறுகளுக்காக ஒன்றிய அரசு மொத்தம் ரூ.13070 கோடி நிதி உதவி அளித்துள்ளது. மேலும் கோவிட் பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு ஆளான சுற்றுலாத்துறைக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் இந்தியா வந்த முதல் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசா கட்டணம் விலக்கு தரப்பட்டது. அதேப்போன்று 171 நாடுகளுக்கு சுற்றுலா விசா அளிப்பது மீண்டும் கொண்டு வரப்பட்டது. சுற்றுலாத் தொழில் துறை பணியாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி செலுத்துவதில் விலக்கு பல்வேறு சலுகைகளுடன் முகவர்கள், நிறுவனங்களுக்கு ரூ.10லட்சம் வரை கடன் உறுதி உள்ளிட்ட சலுகைகள் ஒன்றிய அரசால் அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

Tags : D.R. Balu ,Lok Sabha ,New Delhi ,DMK ,Union Government ,Tamil Nadu ,Uttar Pradesh ,Maharashtra ,Kashmir ,Kerala ,Covid-19 attack ,Union Tourism Minister ,Gajendra Singh Shekhawat ,
× RELATED அர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான்...