×

போர் ஆபத்து நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து முதல் எண்ணெய் கப்பல் மும்பை வந்தது: மேலும் ஒரு கப்பல் இந்திய கடல் எல்லையை அடைந்தது; இந்தியாவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி தரப்பட்டுள்ளதா?

மும்பை: மத்திய கிழக்கில் போர் ஆபத்து நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து முதல் எண்ணெய் கப்பல் மும்பை வந்தடைந்தது. இதே போல மற்றொரு எண்ணெய் கப்பல் இன்னும் ஓரிரு நாளில் மும்பை வந்தடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே, ஆபத்தான ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்தியாவுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலை ஈரான் மறுத்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் மத்திய கிழக்கில் 13வது நாளாக நேற்றும் போர் நீடித்தது.

அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான், பாரசீக வளைகுடாவில் உள்ள குறுகலான ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ளது. அரபு நாடுகளில் இருந்து இவ்வழியாகத்தான் எண்ணெய் கப்பல்கள் பிற நாடுகளுக்கு பயணித்து வருகின்றன. உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடக்கும் இக்கடல் பாதையில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்கி வருகிறது. நேற்று முன்தினம் இந்தியா வந்து கொண்டிருந்த தாய்லாந்து கப்பல் உட்பட 3 வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

இதனால் இப்பாதையில் இந்தியாவுக்கு வரும் 24 கப்பல்கள் தேங்கி நிற்பதாக ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டது. ஏற்கனவே எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளதால், இந்தியா முழுவதும் சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதனால், இந்திய எண்ணெய் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பாக கொண்டு வருவது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் உரையாற்றினார்.

இந்நிலையில், போர் ஆபத்து நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து முதல் எண்ணெய் கப்பல் மும்பை துறைமுகத்திற்கு நேற்று வந்தடைந்தது. லைபீரியா நாட்டைச் சேர்ந்த ‘ஷென்லாங்க் சூயஸ்மேக்ஸ்’ எனும் இந்த கப்பலில் 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கப்பல் கேப்டன் சுக்ஷாந்த் சிங் சாந்து தலைமையில் இயக்கப்பட்டுள்ளது. இவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கப்பலில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என 29 பணியாளர்களும் பத்திரமாக மும்பை வந்து சேர்ந்துள்ளனர்.

கடந்த 1ம் தேதி இக்கப்பல் சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுக் கொண்டு புறப்பட்டுள்ளது. கடந்த 8ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்த இக்கப்பல் நேற்று மும்பை வந்து சேர்ந்துள்ளது. இது ஆபத்தான பாதையில் கேப்டனின் சாதுர்யத்தின் மூலம் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக கடலில் பயணிக்கும் அனைத்து கப்பல்களும் அவற்றில் உள்ள ஏஐஎஸ் எனும் தானியங்கி அடையாள அமைப்பை இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும். இந்த அமைப்பு, ஒரு கப்பல் எங்கு எப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிய உதவும்.

இது கப்பலின் பாதுகாப்புக்கான வசதியாகும். ஷென்லாங்க் கப்பல் கடைசியாக 9ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்பதாக ஏஐஎஸ் கருவி அடையாளம் காட்டிய நிலையில், பின்னர் ஏஐஎஸ் கருவியை அணைத்து விட்டு இக்கப்பல் பயணத்தை தொடர்ந்துள்ளது. போர் உள்ளிட்ட ஆபத்து காலங்களில் ஏஐஎஸ் கருவி அணைக்கப்படுவது விதிவிலக்கானது. இதனை டார்க் மோடு என்பார்கள். இதன் மூலம் இக்கப்பல் யார் கண்ணிலும் படாமல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்துள்ளது. மத்திய கிழக்கில் போர் ஏற்பட்ட பிறகு ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியாவுக்கு வந்த முதல் கப்பல் இது.

இதே போல, இந்தியாவை சேர்ந்த புஷ்பக் பரிமல் எனும் மற்றொரு எண்ணெய் கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்திய கடல் எல்லைக்குள் வந்து சேர்ந்துள்ளது. இது இன்று அல்லது நாளை மும்பை துறைமுகத்தை வந்தடையும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். இவ்வாறு 2 எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்ததால், இந்தியாவுக்கு மட்டும் ஈரான் சிறப்பு அனுமதி வழங்கியிருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை ஈரான் மறுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மிக முக்கியமான எண்ணெய் விநியோக வழித்தடமாக இருப்பதாகவும் அது தொடர்ந்து மூடப்பட்டிருப்பதாகவும் கூறி உள்ளது.

அதே போல இந்திய அரசும் சிறப்பு அனுமதி குறித்த தகவலை உறுதி செய்யவில்லை. இத்தகவல் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் பதிலளிக்க மறுத்து விட்டார். அவர் அளித்த பேட்டியில், ‘‘கடந்த சில நாட்களில் இந்தியா-ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் இடையே 3 முறை உரையாடல் நடந்தது. அதில் கடைசியாக நடந்த உரையாடலில் கப்பல்களை பாதுகாப்பாக கொண்டு வருவது குறித்து பேசப்பட்டது. அது இன்னும் பேச்சளவில் மட்டுமே உள்ளது. இப்போதைக்கு எதையும் உறுதியாக கூற முடியாது’’ என்றார். எனவே, ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து 2 எண்ணெய் கப்பல்கள் இந்தியாவுக்கு வந்தாலும், போர் ஓய்வதற்கான எந்த குறியும் இல்லாததால், எரிபொருள் தொடர்பான அச்சங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.

போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் 3 நிபந்தனைகள்
போரை முடிவுக்கு கொண்டுவர ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் 3 நிபந்தனைகளை நேற்று வலியுறுத்தி உள்ளார்.
* ஈரானின் அனைத்து சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்
* போரால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடுகளை வழங்க வேண்டும்
* எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிரான உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் நிபந்தனை விதித்துள்ளார். இதற்கு அதிபர் டிரம்ப் விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ஒருநாளுக்கு கூட போதாது
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வரும் 2 கப்பல்கள் மூலம் மொத்தம் 3 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கொண்டு வரப்படும் சுமார் 30 லட்சம் பேரல்கள். இந்தியாவின் ஒருநாள் கச்சா எண்ணெய் தேவை 58 லட்சம் பேரல்கள். இதில் சுமார் 27 லட்சம் பேரல்கள் மேற்கு ஆசியாவில் இருந்து வருகின்றன. 2 கப்பல்களின் கச்சா எண்ணெய் இந்தியாவின் தேவையில் 10 முதல் 12 மணி நேரத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

* ஹார்முஸ் மூடப்பட்டிருக்கும் மொஜ்தபா முதல் அறிக்கை
ஈரானின் புதிய உச்ச தலைவராக கடந்த 9ம் தேதி நியமிக்கப்பட்ட அயதுல்லா மொஜ்தபா கமேனி முதல் முறையாக நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், ‘ஈரான் அதன் அண்டை நாடுகளுடன் நல்லுறவை நாடுகிறது. அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்களை மட்டுமே நாங்கள் குறிவைக்கிறோம். அதை இனியும் தொடருவோம். மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து அமெரிக்க தளங்களும் உடனடியாக மூடப்பட வேண்டும். இல்லாவிட்டால் அவை தொடர்ந்து தாக்கப்படும். ஈரானின் எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு கருவியாக ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அமெரிக்க இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் முதல் கொல்லப்பட்ட குழந்தைகள் வரை அனைத்து தியாகிகளின் ரத்தத்திற்கும் பழிவாங்க ஈரான் தொடர்ந்து போராடும்’ என கூறி உள்ளார்.

இந்தியர் பலி
* ஈரானில் போர் காரணமாக 32 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக ஐநா அகதிகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
* அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியாகி உள்ளார். அக்கப்பலில் பணியாற்றிய மேலும் 15 இந்திய ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஈராக்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
* எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 90 டாலரில் இருந்து 100 டாலராக அதிகரித்துள்ளது.
* ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கப்பல்கள் தவிர சீன நாட்டு கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. சீன நிறுவனத்திற்கு சொந்தமானது, சீன ஊழியர்கள் இருப்பவை என தகவல்கள் அனுப்புவதன் மூலம் சீன கப்பல்களை மட்டும் ஈரான் தாக்குவதில்லை.
* ஈரான் துணை ராணுவமான புரட்சிகர காவல் படையின் ஏவுகணை பிரிவின் மூத்த கமாண்டர் அபு தார் முகமதி கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்புடன் இணைந்து பணியாற்றிய இவர் பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

* அமெரிக்க எண்ணெய் கப்பலை தகர்த்த ஈரான்
பாரசீக வளைகுடாவில் ஈராக் கடல் எல்லையில் மார்ஷல் தீவுகள் கொடியுடன் சேப்சீ விஷ்ணு என்ற எண்ணெய் கப்பல் நேற்று முன்தினம் இரவு பயணித்தது. இது அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்நிலையில், ஈரான் இக்கப்பலை தாக்கி அழித்தது. கடலுக்கு அடியில் சீறிப்பாய்ந்து சென்று தாக்கும் நீர்மூழ்கி டிரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் அமெரிக்க எண்ணெய் கப்பல் முற்றிலும் தீக்கிரையாகி உள்ளது.

Tags : Strait of Hormuz ,Mumbai ,India ,Middle East ,
× RELATED தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டப்பேரவை...