மதுரை: நியோமேக்ஸ் மோசடி வழக்கில் 88 துணை நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் நிறுவனம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.5 ஆயிரம் கோடி வரை பொதுமக்களிடம் வசூலித்து ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இந்த ேமாசடி வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி கோவில்பட்டியைச் சேர்ந்த நாராயணசாமி, தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த செல்வக்குமார் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். அதில், இருவரும் ஏஜென்டாக இருந்ததாக கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, ‘‘நியோமேக்ஸ் நிறுவனத்தின் கீழ் 157 துணை நிறுவனங்கள் செயல்பட்டுள்ளன. இதில் 88 நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை 577 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 32 ஆயிரம் பேர் ரூ.108 கோடிக்கு முதலீடு செய்துள்ளனர். இருவரும் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர். இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’’ என்றார். இதையடுத்து விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
The post நியோமேக்ஸ் ரூ.5,000 கோடி மோசடி வழக்கில் 88 வங்கி கணக்குகள் முடக்கம் appeared first on Dinakaran.