தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பதாக கூறி விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் ஆராய்ச்சி நிதி அதிரடி நிறுத்தம்: ஒன்றிய அரசு செயலால் பணிகள் முடக்கம்

புதுடெல்லி: தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பதாக கூறிய ஒன்றிய அரசு, இந்த ஆண்டு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் ஆராய்ச்சி நிதியை நிறுத்தி உள்ளது. இதனால் ஆராய்ச்சி பணிகள் முடங்கிப்போய் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அறிவியல் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கு தேவையான நிதி உதவி ஒன்றிய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி இப்போது வரை விஞ்ஞானிகளுக்கு ஒதுக்கப்படவில்லை.

ஏப்ரல் மாதமே பெற வேண்டிய நிதியை பெற உயர்மட்ட ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் இன்னும் காத்திருக்கிறார்கள். தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை (NRF) அமைத்து, அதன் மூலம் இந்தியாவில் நடைபெறும் ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதியுதவி வழங்குவதாக ஒன்றிய அரசு விஞ்ஞானிகளிடம் ஏற்கனவே உறுதி அளித்து இருந்தது. ஆனால் அதற்கான எந்தபணிகளும் இப்போது வரை நடைபெறவில்லை. மேலும் விஞ்ஞானிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியும் இந்த ஆண்டு ஒதுக்கப்படவில்லை.

இதனால் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ள திட்ட ஊழியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அனைத்து ஆராய்ச்சி பணிகளும் முடங்கிப்போய் உள்ளன. ஐஐடிகள் மற்றும் ஐஐஎஸ்சி போன்ற உயரடுக்கு அறிவியல் நிறுவனங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியும் இன்னும் ஒன்றிய அரசு வழங்கவில்லை. அவர்கள் புதிதாக கணக்கு தொடங்கி, அனைத்து செலவுகளும் செய்த பிறகுதான் அந்த நிதிதான் மீண்டும் வரவு வைக்கப்படும் எ்ன்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

இதுபற்றி மூத்த விஞ்ஞானி எஸ்சி லகோடியா கூறுகையில்,’நான் கடைசியாக 2022 மார்ச் மாதம் மானியங்களைப் பெற்றேன். இப்போது, ​​இந்தியா முழுவதும் வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களின் கணக்குகளும் அழிக்கப்படாவிட்டால், எந்த ஆராய்ச்சியாளரும் அவர்களின் வருடாந்திர மானியங்களைப் பெற மாட்டார்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. எனது திட்ட ஊழியர்களுக்கு எனது சொந்த நிதியில் இருந்து பணம் செலுத்தி வருகிறேன். பணம் வரவு வைக்கப்படாவிட்டால் ஆராய்ச்சி பணியில் ஈடுபடும் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.

* நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படும்: கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘‘நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியை கொல்லும் நரகமாக மோடி அரசு உள்ளது. இதன் காரணமாக நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படும். உயர் ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் இந்த நிதியாண்டிற்கான நிதியை இன்னும் பெறவில்லை. அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பை ஆராய்ச்சியை தொடர பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதி 6.87 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அறிவியலை ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது அரசு அறிவியலை தோற்கடிக்கவும், ஆராய்ச்சியை தோற்கடிக்கவும் விரும்புகிறது” என்றார்.

* மழைக்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்
விஞ்ஞானிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்யாதது கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில் வரும் 20ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பதற்கான மசோதாவை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 20 மசோதாக்கள் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது.

* பொதுசிவில் சட்ட எதிர்ப்புக்கு பணிந்ததா ஒன்றிய அரசு?
பொதுசிவில் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற ஒன்றிய அரசு தீர்மானித்து இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அனைத்து தரப்பிலும் இருந்து ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு கடுமையாக வந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த கருத்து கேட்பு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 28ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்கால கூட்டத்தொடரில் பொதுசிவில் சட்ட மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்றும், பொதுமக்களின் எதிர்ப்பால் ஒன்றிய அரசு பின்வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

* குறைவான நிதி, அதிக ஆராய்ச்சி ப.சிதம்பரம் கிண்டல்
நாட்டின் உயர்மட்ட ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து எந்த நிதியும் ஒதுக்காத ஒன்றிய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி அவர் டிவிட்டில் கூறும் போது, ‘‘இந்த நிதியாண்டுக்கான நிதியை ஏப்ரல் மாதத்தில் பெற வேண்டிய உயர்மட்ட ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் இன்னும் காத்திருக்கிறார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும், உயிரித் தொழில்நுட்பத் துறையும் இவ்விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? இந்த வாரம் ஒன்றிய அரசு ஒரு புதிய முழக்கத்தை உருவாக்கும். அது, ‘’குறைந்தபட்ச நிதி, அதிகபட்ச ஆராய்ச்சி” என்று கூறியுள்ளார்.

The post தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பதாக கூறி விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் ஆராய்ச்சி நிதி அதிரடி நிறுத்தம்: ஒன்றிய அரசு செயலால் பணிகள் முடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: