×

நாகை வரும் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்; மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு

நாகை: நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவரை கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் கார் மூலம் திருவாரூர் சென்றார். அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த அவர் மதிய உணவினை முடித்துக்கொண்டு நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கீழ்வெண்மணி செல்கிறார். அங்கு கீழ்வெண்மணி தியாகி பழனிவேலை சந்திக்கிறார்.

இதனையடுத்து நாகை பொரவச்சேரி ஆண்டவர் நர்சிங் கல்லூரி பின்புறம் தமிழ் சேவா சங்கம் நடத்தும் தமிழர் திருவிழா மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வீடுகள் வழங்கி, மீனவர் மேம்பாட்டுத் திட்டங்களை கவர்னர் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவை முடித்துக்கொண்டு அவர் காரைக்குடிக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். கடந்த 1968ம் ஆண்டு கீழ்வெண்மணி கிராமத்தில் கூலி உயர்வு கேட்டு போராடிய விவசாய கூலித்தொழிலாளர்கள் 44 பேர் ஒரே குடிசையில் அடைத்து உயிருடன் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் அதே கிராமத்தை சேர்ந்த பழனிவேல் குண்டடிபட்டு உயிர் தப்பினார். இவரை தான் ஆளுநர் சந்திக்க உள்ளார்.

ஆனால் ஆளுநரை சந்திக்க தனக்கு விருப்பம் இல்லை என்று பழனிவேல் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, வர்க்க போராட்டத்தில் நில சுவான்தார்களுக்கு எதிராக போராடிய மார்க்சிஸ்ட் தொண்டர்களில் நானும் ஒருவன். அந்த போராட்டத்தின்போது ஆதிக்க சக்திகளால் குண்டடிபட்டு காயமுற்று பாதிக்கப்பட்டேன். அப்போது எல்லாம் வந்து சந்திக்காதவர்கள் தற்போது அரசியல் ஆதாயத்திற்காக சந்திக்க வருகிறார்கள். அவரை சந்திப்பதில் எனக்கு துளியளவும் விருப்பமில்லை என்று கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கூறியதாவது: தமிழ்நாடு அரசாங்கம் அனுப்பி வைத்துள்ள 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜ செய்ய வேண்டிய வேலைகளின் ஒரு பகுதியை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வருகிறார். இந்துத்துவ சக்திகளின் பிரதிநிதியான ஆளுநர் ரவி, வெண்மணி வருவதும், தோழர் கோ.பழனிவேலைச் சந்திக்கப் போவதாக கூறுவதும் வன்மையான கண்ட னத்திற்கு உரியது. தமிழ் சேவா சங்கம் என்கிற பெயரில் ஆர்எஸ்எஸ் வேலைகளைச் செய்து வரும் ஆளுநருக்கு, கீழ வெண்மணி செல்ல முயன்றால் உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி கருப்புக் கொடி காட்டு வோம் என்றார். இதனால் திருச்சி, திருவாரூரில் ஆளுநர் செல்லும் வழிகள் மற்றும் கீழவெண்மணி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post நாகை வரும் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்; மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Marxist ,Tamil Nadu ,Governor ,R. N. Ravi ,Trichy ,Pradeep Kumar ,Thiruvaroor ,Nagai ,Marxist Party ,
× RELATED வயநாடு பேரிடர் மார்க்சிஸ்ட் கம்யூ. ரூ.36 லட்சம் நிதி; பாலகிருஷ்ணன் தகவல்