தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்: தேர்தல் களத்தில் தீவிர களப்பணியாற்ற வேண்டும்

* முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை ‘‘நாடாளுமன்ற தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றியை இலக்காக கொண்டு கட்சியினர் தேர்தல் பணியாற்ற வேண்டும்’’ என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடந்தது. இதில், மாவட்ட திமுக செயலாளர்கள், 234 தொகுதிகளின் திமுக தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும். ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கை ஜூன் 3ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதிகளவில் இளைஞர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது அரசின் திட்டங்கள், பணிகளை எடுத்து சொல்ல வேண்டும். பூத் கமிட்டி பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். மேலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றிபெற வேண்டும். அது தான் நமது இலக்கு. அதன் அடிப்படையில் உங்கள் பணிகள் இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் பணிகளை இப்போதே விரைவுப்படுத்த வேண்டும்.

நாம் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்து, மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து இருக்கிறோம். ஆட்சிக்கு வர தலைமைக் கழக நிர்வாகிகள் தொடங்கி, கடைக்கோடி தொண்டர்கள் வரை கடுமையாக உழைத்தோம். அந்த உழைப்போட பலனாக தான், மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ளோம். அதை விட அதிகமான உழைப்பு ஆட்சி நடத்துவதற்கு தேவை. உழைக்க நான் என்றைக்கும் தயாராக உள்ளேன். கடந்த ஆட்சியோட அலங்கோலத்தால், நிதி சிக்கல் இருந்தும், மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்கள அறிவித்து, செயல்படுத்தி வருகிறோம். நாம் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

மகளிருக்கு இலவசப் பேருந்து, செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் முதல் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, மக்களைத் தேடி மருத்துவம், பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி, உழவர்களுக்கு இலவச மின்சார இணைப்பு திட்டம் என்று திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். திமுக ஆட்சியில கொண்டு வரும் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஏதாவது ஒரு வகையில நேரடியாக பயன்படுகிற வகையில் நிறைவேற்றி வருகிறோம். கள ஆய்வில் முதல்வர் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்து மக்களையும் நேரடியாக சந்தித்து பேசுகிறேன். திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை 1222 இடங்களில் நடத்தியிருக்கிறோம். எனக்கு கிடைத்த தகவல்படி 80 விழுக்காடு கூட்டங்கள், மிகச்சிறப்பாக நடந்துள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் சரிவர கூட்டங்கள் நடக்கவில்லை.

10 ஆண்டுகள் கழித்து, மக்களின் தேவைகளை பற்றி சிந்திக்கிற ஆட்சி அமைந்துள்ளது. இந்த இரண்டாண்டு காலமாக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆட்சி எவ்வளவு முக்கியமோ அதைவிட கட்சி முக்கியம். இதை எல்லாரும் மனதில் வைத்து செயல்பட வேண்டும். கட்சி வலுவாக இருக்க வேண்டும். நம் கவனம், எல்லாம் கட்சியை வலுப்படுத்துவதிலும், தொண்டர்களை உற்சாகமாக வைத்து கொள்வதிலும் தான் அதிகம் இருக்க வேண்டும். தொண்டர்கள் யாராவது, குறைகள் சொன்னால், அதை காது கொடுத்து கேட்க வேண்டும். அந்தப் பிரச்னைய தீர்க்க முடியுமா என்று பார்க்க வேண்டும். குறை சொல்பவர்களிடம் ஆறுதலாக பேசுங்கள். மாவட்டச் செயலாளர்களும், பொறுப்பு அமைச்சர்களும் அவரவர் மாவட்டங்களில் இருக்கும் பகுதி, ஒன்றிய, நகர-பேரூர் நிர்வாகிகளோட குறைகளைக் கேட்டு, அதை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும். நம் குறைகளை கேட்க ஆள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை வந்தாலே, பலருக்கும் பாதி பிரச்னைகள் தீர்ந்துடும். மனதில் பெரிய பாரம் குறைந்து விடும்.

இயக்கம் என்பது தலைமை தொடங்கி, கடைக்கோடி தொண்டன் வரை உளப்பூர்வமாக பிணைந்திருக்கும் அமைப்பு. ஒவ்வொரு தொண்டனும், இது நம் ஆட்சி என்று பெருமைப்பட வேண்டும்.நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் சரியாக ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. 40 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும். இதனை இலக்காக வைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும். எல்லோருக்கும் ஒரே சமயத்தில் பதவிகளும் பொறுப்புகளும் கிடைப்பதில்லை. எம்எல்ஏக்களாக இருக்கிறவர்கள் அமைச்சராக விருப்பப்படுவதில் தவறில்லை. ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அதையே நினைத்து கொண்டே இருக்க வேண்டாம். திமுக தொண்டர்கள் பலருக்கும் சட்டமன்ற உறுப்பினராவதற்கு கூட வாய்ப்பு வரவில்லை என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.

அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் என்றில்லை. கட்சி, ஆட்சியில் ஒவ்வொரு பதவி, பொறுப்பிலும் இதுதான் இன்றைய நிலை. சிலருக்கு மட்டுமே வாய்ப்புகள் வரும். மற்றவர்கள் காத்திருப்பார்கள். அதே சமயம் உழைத்து கொண்டேயிருப்பார்கள். உழைப்பவர்களுக்கு நிச்சயமாக அங்கீகாரம் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்ற லட்சிய வேகம் இருக்க வேண்டும். அதே சமயம் நம்மிடம் இருக்கும் பதவி, பொறுப்பை வைத்து கட்சியையும், மற்றவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும், உற்சாகமூட்ட வேண்டும். கட்சியினர் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் செயல்பட்டால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி, அதன் பிறகு வரும் சட்டமன்ற தேர்தலிலும் நாம் தான் பெரும் பலத்தோடு வெல்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.

* ‘உழைப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் இடம்’

கலந்தாலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யுங்கள். இல்லை என்றால் மாற்றப்படுவீர்கள். உழைப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் இடம் உண்டு. உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை. பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்கள் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்’ என்று கூறியதாக கூறப்படுகிறது.

The post தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்: தேர்தல் களத்தில் தீவிர களப்பணியாற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: