நன்றி குங்குமம் தோழி
பாக்டீரியா நம்முடைய தசையை சாப்பிடக்கூடியதா? சொல்லும் போதே பயமாக இருக்கிறதே! இப்படி புதுசு புதுசா எத்தனை நோயை நாம் சந்திக்க வேண்டி இருக்கும் என்று நினைக்க வேண்டாம். காரணம், இது ஏற்கனவே இருக்கும் பாக்டீரியா தொற்றுதான். இந்த பாக்டீரியா, தற்போது ஜப்பானில் பரவி வரும் ஓர் உயிர்கொல்லி நோயாக உள்ளது. இதனை ஸ்ரெப்டோக்காகஸ் டாக்சிக் சிண்ட்ரோம் என்றும் அழைக்கிறார்கள். இவை நம் நாட்டில் பெரும் அளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் ஜப்பான், அமெரிக்காவில் இதன் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. வருடா வருடம் இதன் அளவும் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.
மேலும் இந்த பாக்டீரியா தொற்றால் கொரோனா அளவுக்கு தாக்கம் இருக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. நம் நாட்டில் இது போல் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு இருந்தாலும், மிகவும் மோசமாக பாண்டமிக் என்ற நிலை அளவிற்கு ஏற்படவில்லை. நூற்றில் ஒருவருக்கு அல்லது நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் இது போன்ற தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் 65 வயதிற்கு மேல் உள்ளவர்களும், குழந்தைகளும்தான்.
இந்த தொற்றுக்கு காரணமாக மூன்று வகை பாக்டீரியாவை சொல்கின்றனர். ஸ்டாபிலோகாக்கஸ் ஆரஸ், (Staphylococcus Aureus), க்ளோஸ்டிரிடியம் ஏரோமோனாக் (Clostridium Aeromonach), ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோனீன்ஸ் (Streptococcus Pyogenes) அல்லது ஸ்ட்ரெப்டோ குரூப் ஏ பாக்டீரியா என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தொண்டை அல்லது தோலில் காணப்படும் இந்த ஸ்ட்ரெப்டோ குரூப் ஏ பாக்டீரியா பெரும்பாலும் லேசான தொற்றுகளையே உருவாக்கும். ஒரு சில நேரங்களில் இந்த பாக்டீரியாவால் ஏற்படும் நச்சு தோல் திசுக்களை பாதித்து உள்செல்லும் போதுதான் Streptococcus Toxic Shock Syndrome (STSS) போன்ற தீவிரமான தொற்றுக்கும் வழிவகுக்கும்.
எப்படி இந்த STSS தொற்று ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள் மற்றும் இந்த தொற்று தீவிரமடையும் போது ஏற்படும் பாதிப்பு என்னென்ன என்பதனை தொற்று நோய்கள் மற்றும் தொற்று கட்டுப்பாடு மூத்த ஆலோசகர், டாக்டர் மதுமிதா விளக்குகிறார். ‘‘இந்த பாக்டீரியா நீர் சுற்றுச்சூழலில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். தோலில் ஏற்படும் சிறு கீறல்கள் அல்லது வெட்டுக் காயங்களினால் உடலில் உள் சென்று உடல் உறுப்புகள் மற்றும் ரத்த ஓட்டத்தில் இந்த தொற்று பரவும். மேலும் அதன் செயல்பாடுகளை துண்டித்து, உறுப்புகளை செயலிழக்க செய்கிறது. சின்ன காயம்தானே என சாதாரணமாக விடாமல், அதனை முறையாக சுத்தம் செய்து சரி செய்ய வேண்டும்.
இதன் மூலம் இந்த பாக்டீரியா தொற்று ஏற்படாமல் பாதுகாக்கலாம். ஒரு வேளை தொற்று ஏற்பட்டால் இதற்கு முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதில் பத்தில் மூன்று பேர் இறக்கிறார்கள் என்று சில ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த தொற்று ஏற்பட்ட நபர் குறைந்தபட்சம் 48 மணி நேரங்களில் உயிரிழப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் இந்த தசை உண்ணும் பாக்டீரியா பற்றி பெரிதாக விழிப்புணர்வு ஏற்படவில்லை. இருப்பினும் அடிப்படை சுத்தம்தான் இந்த பெரிய உயிர்கொல்லி நோயிலிருந்து நம்மை காக்கும்.
இதன் ஆரம்பகட்ட அறிகுறிகளாக காய்ச்சல், குளிர், உடல் வலி, வாந்தி, குமட்டல் போன்றும், தீவிரமான பின் குறைந்த ரத்த அழுத்தம், சுவாசிப்பதில் சிரமம், சிறுநீரகப் பிரச்னைகள், சிராய்ப்புகளில் ரத்தக்கசிவு, கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றும் இருக்கும்’’ என குறிப்பிட்டவர் இதனை தவிர்க்கும் வழிமுறைகளையும் விளக்குகிறார்.
‘‘இந்த பாக்டீரியா தொற்றுக்கு இன்னுமொரு காரணம், சுத்தமின்மை. கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். இருமல் மற்றும் தும்பும் போது கைகளை வைத்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விஷயங்களை கடைபிடித்தல் அவசியம். திறந்த காயங்களை சரியாக சுத்தம் செய்தல் வேண்டும்.
தோள்களில் இருந்து உடல் உறுப்புகளுக்கு பரவி அதனை செயலிழக்க செய்யும். மேலும், அம்மை போன்ற தொற்று நோய் உள்ளவர்களுக்கும் இது எளிதில் பரவும் என்றும் குறிப்பிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இந்த தொற்று அவ்வளவு எளிதில் பரவாது. எனினும் ஏற்கனவே இந்த தொற்று உள்ளவர்களிடம் நேரடியான தொடர்பில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளவும். இது தீவிரமடையும் போது, இதன் மூலம் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை நீக்குவது அந்த நபருக்கு நல்லது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு 200க்கும் மேற்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதுபோக, இந்த தொற்றுக்கு அதிகமாக பாதிக்கப்படுவது, சர்க்கரை நோயாளிகளும், குறைவான நோயெதிர்ப்பு தன்மை உடையவர்களும், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களும்தான். சில சமயம் பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கும் இந்த தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இது ஜப்பானுக்கு மட்டும் உரித்தான நோய், நம்ம நாட்டில் இல்லை, அதனால் நமக்கு வராது என்று அஜாக்கிரதையாக இருப்பது தவறு. கடந்த ஆண்டு இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. மேலும் சில நாடுகளிலும் இதன் தாக்கம் உள்ளது. கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட போது இதன் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் இதனை பெரிதாக கருதவில்லை. ஆனால் தற்போது அதிகரித்துவரும் இதன் எண்ணிக்கை மருத்துவர்களை அச்சம் கொள்ள செய்கிறது.
இந்த வருடத்திற்குள் ஜப்பானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் மேலாக செல்லும் என்றும் இதன் இறப்பு வீதமும் கடந்த ஆண்டிற்கு இணையாக இருக்கும் என்று புளூம்பெர்க், டோக்கியோ மகளிர் மருத்துவ பல்கலைக்கழக தொற்று நோய்களின் பேராசிரியர் கென் கிகுச்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். பெரும்பாலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பாதி பேருக்கு இந்த தொற்று எவ்வாறு ஏற்படுகிறது என்பது தெரியாது என்கிறார்கள் நிபுணர்கள். இதனை தடுக்கும் ஒரே வழி அடிப்படை சுத்தம் மற்றும் சுகாதாரமான உணவு.
இந்தியாவில் இதுவரை வருடத்திற்கு ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையில்தான் இந்த தொற்று பாதித்துள்ளது. இந்த தொற்றை முழுமையான உடல் பரிசோதனையின் மூலம் கண்டறியலாம். மேலும், இந்த தொற்று பரவும் தன்மை அற்றது என்பதினாலும், கொரோனா போன்று எளிதில் பாதிப்பு ஏற்படாது என்பதில் நிம்மதியளிக்கிறது. எனவே தோல் சார்ந்த ஏதேனும் சின்ன சிராய்ப்பு, அலர்ஜி, வெட்டுக் காயங்கள் இருந்தால் உடனே அதற்கான சிகிச்சை எடுப்பது அவசியம்’’ என்கிறார் டாக்டர் மதுமிதா.
தொகுப்பு: காயத்ரி காமராஜ்
The post தசை உண்ணும் பாக்டீரியா! appeared first on Dinakaran.