நன்றி குங்குமம் டாக்டர்
சர்க்கரை இனிப்புதான். ஆனால் அது நோயாக மாறினால் கடும் கசப்பு. இன்றைய வாழ்க்கை முறைக் கோளாறுகளால் சர்க்கரை நோய் இல்லாத குடும்பமே இல்லை. சர்க்கரை வந்துவிட்டாலே சர்க்கரையைத் தொடாதே என்றுதான் மருத்துவர்கள் முதல் எல்லோருமே அலறுவார்கள். சர்க்கரை நோயாளிகளை இனிப்பு சாப்பிட வைக்க என்ன செய்யலாம் எனத் திட்டமிட்ட ஹெல்த் ப்ராடக்ட் நிறுவனங்கள் லீவ்லோஸ் எனப்படும் செயற்கை சர்க்கரையை சுகர்ஃப்ரீ சர்க்கரைகள் என்ற பெயரில் சந்தையில் அறிமுகப்படுத்தின.
சர்க்கரையே நாவில் படாமல் செத்துக்கிடந்த சர்க்கரை நோயாளிகளின் நாவுகள் நடனமாடத் தொடங்கின. இன்று சுகர்ஃப்ரீ அல்லது லீவ்லோஸ் இனிப்பு வியாபாரம் களைகட்டுகிறது. காப்பி, டீயில் ஓன்றிரண்டு லீவ்லோஸ் கட்டிகளைப் போட்டுக் கலந்து குடிப்பது முதல், லீவ்லோஸால் செய்யப்பட்ட பலகாரங்கள் வரை இந்த சுகர்ஃப்ரீ பல அவதாரங்கள் எடுத்திருக்கிறது. சர்க்கரை நோய் வந்துவிட்டாலே சர்க்கரை சாப்பிடக் கூடாது என்று கட்டுப்பாடு ஒருபுறம் இருக்க, லீவ்லோஸ் சாப்பிடலாம் என்று அதிலும் ஒரு புதிய குறுக்குவழியைக் கொண்டு வந்தார்கள். அதான் லீவ்லோஸ் சாப்பிடலாம்னு சொல்லிட்டாங்களேன்னு சிலர் அளவுக்கு அதிகமாக அதை உண்கிறார்கள்.
உறவினர் ஒருவர் நடமாடும் சர்க்கரை ஆலை என்று கிண்டல்செய்யும் அளவுக்கு உடல் முழுக்க சுகர் கொண்டவர். லீவ்லோஸ் ஸ்வீட்ஸ் (Levulose Sweets) சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்று யாரோ சொன்னதைக் கேட்டு, தீபாவளிக்கு நிறைய வாங்கிவந்து, பல நாள் ஆசை தீர்ந்தது என்று அளவுகடந்து சாப்பிட்டார். கொஞ்ச நேரத்தில் சுகர் கன்னா பின்னாவென எகிறி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார்.
லீவ்லோஸ் என்றால் என்ன? லீவ்லோஸில் தயாரிக்கப்படும் இனிப்புகள், நிஜமாகவே சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது தானா என்று பார்போம். சர்க்கரைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஸ்வீட்னர்களில், ஒருவிதக் கசப்புணர்வு இருக்கும். ஆனால் லீவ்லோஸ் சேர்க்கப்பட்ட உணவுப்பொருளை உண்ணும்போது, கசப்புஉணர்வு இருக்காது. மற்றொரு சிறப்பான விஷயம் சர்க்கரை சேர்க்கப்பட்ட ஸ்வீட் எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அதில் பாதி அளவுதான் லீவ்லோஸ் சேர்க்கப்பட்ட ஸ்வீட்களை சாப்பிடமுடியும். ஏனெனில் தித்திப்பு அதிகம் என்பதால், திகட்டும்.
தற்போது, இந்தியாவில் லீவ்லோஸ் கிடைப்பது இல்லை. எனவே அயல்நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறார்கள். பழங்களில் இருந்து இயற்கை சர்க்கரையான லீவ்லோஸைப் பிரித்தெடுப்பது மிகவும் கடினம். அதிக செலவாகும். ஒரு கிலோ சர்க்கரையின் விலையைவிட மூன்று மடங்கு அதிகமானது ஒரு கிலோ லீவ்லோஸின் விலை. லீவ்லோஸை நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில்கூட சர்க்கரைக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.
கரும்பில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரையை சுக்ரோஸ் என்போம். பழங்களில் இருந்து கிடைக்கக்கூடிய ஃபிரக்டோஸின் வேறு வடிவங்களில் ஒன்றுதான் லீவ்லோஸ். உணவுப் பொருளிலுள்ள சர்க்கரை எவ்வளவு அளவு, எவ்வளவு நேரத்தில் ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் குறிப்பது கிளைசமிக் குறியீடு. சர்க்கரையின் கிளைசமிக் குறியீட்டு எண் 69. ஆனால், லீவ்லோஸின் கிளைசமிக் குறியீட்டு எண் 19தான். அதேசமயம் லீவ்லோஸ், சர்க்கரையைவிட 1.7 மடங்கு அதிக இனிப்புச் சுவை கொண்டது. தற்போது பயன்படுத்தப்படும் சர்க்கரையை உண்டால், ஒருவருக்கு எந்த அளவுக்கு உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்குமோ, அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே, லீவ்லோஸ் இனிப்புப் பொருளை உண்டால் அதிகரிக்கும்.
லீவ்லோஸில் கலோரியின் அளவும் குறைவுதான். என்றாலும், லீவ்லோஸ் சேர்க்கப்பட்ட இனிப்பு வகைகளில் நெய், எண்ணெய் போன்ற பொருட்கள் சேரும்போது அதன் கலோரி அதிகமாகிவிட வாய்ப்பு உள்ளது.லீவ்லோஸ், இயற்கையான இனிப்புப் பொருள் என்பதால், இன்சுலின் போட்டுக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகள்கூடச் சாப்பிடலாம். ஆனால் அனைத்துச் சர்க்கரை நோயாளிகளுமே, ஒரு நாளைக்கு 20 கிராம் அளவுக்குள் மட்டுமே, லீவ்லோஸ் சேர்க்கப்பட்ட இனிப்புகளை உண்ண வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்பு என்பதால் அளவு மீறினால் பிரச்னைதான். லீவ்லோஸ் சேர்க்கப்பட்ட இனிப்புப் பண்டங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுப்பொருள் கொண்டிருக்கும், கலோரி அளவைவிட 30% குறைவானது. எனவே, உடல்பருமன் அதிகமாக உள்ளவர்கள், இதய நோயாளிகளும்கூடக் குறைந்த அளவு எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை’ என்றார்.
ப்ரீ டயாபடீக் உள்ளவர்கள், சர்க்கரை நோய் வந்தவர்கள் இரு தரப்பினரும் அதிகம் கவனிக்க வேண்டியது கலோரி அளவைத்தான். இனிப்பு மற்றும் கார வகைகளில் கலோரி அதிகமாக இருக்கும். லீவ்லோஸ் ஸ்வீட்ஸ் விற்கப்படும் கடைகளில் இனிப்புப் பண்டம் வாங்கும் போது அதில் கலோரியின் அளவு அச்சிடப்பட்டு இருக்கிறதா, தரநிர்ணயம் செய்யப்பட்ட குறியீடு இருக்கிறதா, என்பதைப் பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.
டயாபடீக் இனிப்பு
சர்க்கரை நோயாளிகளுக்கான ஸ்வீட் வீட்டில் தயாரிக்கும்போது கலோரி அளவில் கவனம் செலுத்த வேண்டும். மைதாவுக்குப் பதிலாகக் கோதுமை பயன்படுத்தலாம். ஸ்வீட் தயாரிக்கும்போது நெய், வெண்ணெய் போன்றவற்றை அதிகம் சேர்க்கக் கூடாது.சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்தவேண்டும். இதை 120 டிகிரிக்கு மேலே சூடுபடுத்தக் கூடாது.
குறிப்பு: அளவுக்கு அதிகமாக சர்க்கரை உள்ளவர்கள் இனிப்புகளை உண்ணாமல் இருப்பதே நல்லதே. மேலும், எல்லா சர்க்கரை நோயாளிகளுமே மருத்துவர் பரிந்துரையோடு இந்த டயாபடீக் இனிப்புகளை உண்பதே ஆரோக்கியம்.
தொகுப்பு: லயா
The post சுகர்ஃப்ரீ சாப்பிடலாமா? appeared first on Dinakaran.