புதுடெல்லி: கொலை வழக்கில் கைதாகி 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்த அரியானா மாடல் அழகியை சுட்டுக்கொலை செய்த ஓட்டல் அதிபர் உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அரியானாவை சேர்ந்தவர் திவ்யா பகுஜா (27). மாடல் அழகி. குருகிராம் செக்டார் 7ல் உள்ள பல்தேவ் நகரில் வசித்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி குருகிராம் நகரின் முக்கிய தாதா சந்தீப் கடோலி மும்பை ஓட்டலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது காதலி தான் திவ்யா பகுஜா. இது போலி என்கவுன்டர் என்று புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பல போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த போலி என்கவுன்டரில் போலீசாருக்கு உதவிய திவ்யா, தாதா கடோலி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக மாடல் அழகி திவ்யா, அவரது தாய் உள்பட 7 பேரை அரியானா போலீசார் கைது செய்தனர். விசாரணையில் விரேந்திர குமார் குஜ்ஜார் என்ற இன்னொரு தாதாவின் திட்டத்தின்படியே போலீசாரால் கடோலி கொல்லப்பட்டதும், அதற்கு திவ்யா உதவி செய்ததும் தெரியவந்தது. 7 ஆண்டுகள் சிறையில் இருந்த திவ்யா கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் குருகிராம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த திவ்யா திடீரென மாயமானார். கடைசியாக, ஓட்டல் முதலாளி அபிஜீத் சிங்குடன் திவ்யாவை பார்த்ததாக தகவல் தெரிய வந்தது. ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது 2 பேர் போர்வையால் சுற்றப்பட்ட ஒரு சடலத்தை மாடிபடிகள் வழியாக இழுத்து சென்று வெளியே நிறுத்தப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ காரில் ஏற்றியது பதிவாகியிருந்தது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங்கை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
அதில், தனது அந்தரங்க புகைப்படங்களை திவ்யா எடுத்து வைத்து கொண்டு மிரட்டியதாகவும், அதனால் திவ்யாவை கொன்று சுட்டுக்கொன்றுவிட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அபிஜீத் சிங் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சடலத்தை வீச பயன்படுத்திய கார் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் சடலம் இன்னும் மீட்கப்படவில்லை. அவரது உடலை எரித்துவிட்டதாகவும், அதற்காக தனது ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சத்தை அபிஜீத்சிங் கொடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post கொலை வழக்கில் ஜாமீனில் வந்த மாடல் அழகி சுட்டுக்கொலை: ஓட்டல் அதிபர் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.