மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் பரணிகுமார் ஆஜராகினர். அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது, இரு நீதிபதிகள் அமர்வில், எந்தெந்த கருத்துகளில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளனர் என்பது குறித்து மேகலா தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்ட பின், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தானா என்ற விஷயத்திலும், அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்தும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியுமா என்ற அம்சங்களில் இரு நீதிபதிகளும் முரண்பட்டுள்ளனர்.
கைதுக்கான காரணங்களை மூத்த நீதிபதியான நிஷாபானு கையாளவில்லை. மற்றொரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி இதனை கையாண்டுள்ளார். இந்த அம்சத்தில் நீதிபதிகள் முரண்பட்டுள்ளனர் என்று கூறமுடியா? கைது செய்யும் முன் நோட்டீஸ் அனுப்ப வகை செய்யும் குற்ற விசாரணை முறைச் சட்டம் 41 ஏ பிரிவு, அமலாக்கத் துறைக்கு பொருந்துமா என்பது குறித்து இரு நீதிபதிகளும் கருத்து தெரிவிக்காத நிலையில் அதுகுறித்த வாதங்களை முன்வைக்க கூடாது என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இது சம்பந்தமாக வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று மேகலா தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, வழக்கில் இறுதி முடிவெடுக்க இந்த அம்சம் குறித்து வாதம் செய்யலாம். செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா, நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா, செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா, கூடாதா? என்று 3 கேள்விகளை தீர்மானித்து விசாரணையை வரும் 11, 12ம் தேதிகளுக்கு தள்ளிவைத்தார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 12ம் தேதி முடிய உள்ள நிலையில் அவருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் காவல் நீட்டிப்பு வழங்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
The post அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு மீது வரும் 11, 12ல் விசாரணை: 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அறிவிப்பு appeared first on Dinakaran.