தமிழ் வளர்ச்சி துறையின் தலையாய பணியான ஆட்சிமொழி திட்ட செயலாக்க பணியினை மேன்மையுற செய்திட, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் தலைமை செயலகத் துறைகளிலும், தமிழ் வளர்ச்சி இயக்குநரால் துறை தலைமை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், அரசு நிறுவனங்கள், மாவட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகியவற்றிலும் இத்திட்டம் தொடர்பான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்கள், மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்கள், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்கள் ஆகியோர் மாவட்ட நிலை மற்றும் சார்நிலை அலுவலகங்களில் இந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான ஆட்சிமொழி திட்ட செயலாக்க ஆய்வு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் தலைமையில் தலைமை செயலக அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றுள், தமிழ் ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகமாக தலைமை செயலக சட்டமன்ற பேரவை செயலகம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான சுழற்கோப்பையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் சட்டமன்ற பேரவை செயலக அரசு முதன்மை செயலாளர் சீனிவாசனிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஔவை அருள் ஆகியோர் உடனிருந்தனர்.
The post ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய சட்டமன்ற பேரவை செயலக அலுவலகத்திற்கான சுழற்கோப்பை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார் appeared first on Dinakaran.