மேட்டூர் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்: வெப்பமாறுதல் காரணம் என மீன்வளத்துறை தகவல்

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர் தேக்கம் 59.25 சதுரமைல் பரப்பு கொண்டது. நீர்தேக்கப் பகுதியில் 25 வகையான மீன்கள் உள்ளன. கட்லா, ரோகு, மிர்கால் உள்ளிட்ட இந்தி பெருங்கெண்டை மீன்களை மீன்வளத்துறை செயற்கை தூண்டுதல் முறையில் உற்பத்தி செய்து மேட்டூர் அணையில் இருப்பு வைப்பார்கள். பெரும்பாலான மீன்கள் இயற்கையாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. மேட்டூர் மீன்களுக்கு தமிழகம் முழுவதும் நல்ல கிராக்கி உண்டு. மீன் உணவு தயாரிக்கவும், கோழித்தீவனம் தயாரிக்கவும் அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் மீன் பிடித்தல், கொசுவைகள் மூலம் மீன்குஞ்சுகளை பிடிப்பதாலும், மேட்டூர் நீர் தேக்கத்தில் மீன்வளம் அழிந்து வருகிறது. கட்லா, ரோகு உள்ளிட்ட முதல் ரக மீன்கள் கிடைப்பது அரிதாகி போனது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைப்பகுதியில் அணையின் வலதுகரை மற்றும் இடதுகரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் நேற்று மீன்வளத்துறை அதிகாரிகள் நீர் மற்றும் இறந்துபோன மீன்களை பரிசோதனை செய்ததில் ஆக்சிஜன் சீராக இருந்துள்ளது. நீரில் ரசாயன கலப்பு இல்லை என்றும் தெரியவந்துள்ளது. மீன்கள் இறக்கும் நேரத்தில் நீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, பின்னர் சிறிது நேரத்தில் சீராகி இருக்கலாம். இது குறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தர்மல்ஷாகல் எனப்படும் வெப்பமாறுதல் காரணமாக மீன்கள் இறந்துள்ளன.

தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக தண்ணீர் சூடாக உள்ள இடத்தில் திடீரென மழை பெய்வதால், குளிர்ந்த நீர் கலந்து வெப்ப மாறுதல் ஏற்படுகிறது. இதனை தாங்க முடியாத மீன்கள் இறந்து போகின்றன. அதேபோல் குளிர்ந்த நீர் உள்ள பகுதியில் திடீரென வெப்பநீர் கலப்பதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். அப்போது மீன்கள் அங்கிருந்து வேறுபகுதிக்கு சென்றால் அல்லது 15 நிமிடம் வரை தாக்கு பிடித்தால், அவை பிழைத்துக்கொள்ளும். வேறு பகுதிக்கு செல்ல முடியாத 15 நிமிடங்கள் தாக்கு பிடிக்க முடியாத மீன்கள் இறந்து கரை ஒதுங்குகின்றன. ஆண்டுதோறும் நடக்கும் இயற்கையான நிகழ்வுதான், என்றார்.

The post மேட்டூர் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்: வெப்பமாறுதல் காரணம் என மீன்வளத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: