×

மயிலாடுதுறை, கரூர், அரியலூரில் ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் போராட்டம்: கூட்டணி கட்சியினரும் பங்கேற்பு

திருச்சி: மாநில உரிமைகளுக்கு எதிராக ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், ஆளுநர்கள் மூலம் மாநில அரசின் அதிகாரங்களில் தலையிட்டு வருவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், இன்று(8ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஒன்றிய பாஜக அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே உள்ள கிட்டப்பா அங்காடி முன் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், திமுக எம்எல்ஏ நிவேதாமுருகன், காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் உள்பட கட்சியினர் திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசு, ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டனர்.

அரியலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அண்ணா சிலை அருகே இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். இதில் மதிமுக எம்எல்ஏ சின்னப்பா, திமுக எம்எல்ஏ கண்ணன் உள்பட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். கரூர் தபால் நிலையம் முன் மார்க்சிஸ்ட் நிர்வாக குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே மாலையில் மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையிலும், நாகை அவுரி திடலில் எம்எல்ஏ நாகை மாலி தலைமையிலும், பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையிலும், தஞ்சை பனகல் கட்டிடம் முன் மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் தலைமையிலும், திருவாரூர் ரயில் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

The post மயிலாடுதுறை, கரூர், அரியலூரில் ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் போராட்டம்: கூட்டணி கட்சியினரும் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Marxist ,Union government ,Mayiladuthurai, ,Karur ,Ariyalur ,Trichy ,Tamil Nadu ,Marxist-Communist Union ,
× RELATED வயநாடு பேரிடர் மார்க்சிஸ்ட் கம்யூ. ரூ.36 லட்சம் நிதி; பாலகிருஷ்ணன் தகவல்