கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 1,700 படகுகள் கரையிலேயே நிறுத்தம்

ராமேஸ்வரம்: மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதால், ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 1700 படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். அந்தவகையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1500க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளின் மூலம் மீனவர்கள் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர். காற்றின் வேகமாறுபாடு, புயல் போன்ற வானிலை மாற்றங்களின் போது மீனவர்களின் பாதுகாப்புக் கருதி கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

அதன்படி இன்று மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுகிறது. மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் யாரும் இன்று மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி துறைமுகத்திலேயே 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால், நாளொன்றுக்கு ரூ. 1 கோடி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

The post கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 1,700 படகுகள் கரையிலேயே நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: