இதற்கிடையே, 26 எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியை சேர்ந்த 21 எம்பிக்கள் கொண்ட குழு மணிப்பூரில் 2 நாள் பயணம் மேற்கொண்டு கள நிலவரங்களை ஆய்வு செய்தது. நிவாரண முகாம்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வரும் 8, 9ம் தேதிகளில் நடக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி வரும் 10ம் தேதி பதிலளிக்க உள்ளார். இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த 31 எம்பிக்கள் நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தனர். அப்போது தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர்கள் அளித்தனர். இந்த சந்திப்புக்கு பின் பேட்டி அளித்த மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே கூறியதாவது: மணிப்பூருக்கு நேரில் சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்து திரும்பிய எங்கள் குழுவினர் அங்குள்ள நிலைமையை ஜனாதிபதியிடம் விளக்கினர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவர்கள் பார்த்த விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், ஜனாதிபதியிடம் நாங்கள் கோரிக்கை மனு ஒன்றை தந்துள்ளோம்.
அதில், இப்போதும் வன்முறை சம்பவங்கள் எப்படி தொடர்கின்றன, குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், நிர்வாண ஊர்வலம் நடத்தப்பட்டது குறித்து தெரிவித்துள்ளோம். இந்த வன்முறையில் இதுவரை 60 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளதையும், 5,000 வீடுகள் எரிப்பு, 200 பேர் பலியானதையும் குறிப்பிட்டுள்ளோம். நிவாரண முகாம்களில் மக்கள் சந்திக்கும் இன்னல்களையும், அங்கு எந்த மருத்துவ வசதி இல்லாததையும் தெரிவித்துள்ளோம். இந்த விஷயங்கள் அனைத்தும் ஜனாதிபதி கவனத்திற்கு கொண்டு வர வேண்டுமென்பதற்காக அவரை சந்தித்தோம். மணிப்பூர் மட்டுமின்றி அரியானாவில் நடக்கும் வகுப்புவாத வன்முறை குறித்தும் கவலை தெரிவித்துள்ளோம். பிரதமர் அலுவலகத்தில் இருந்து 100 கிமீ தொலைவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறை குறித்து ஒன்றிய அரசு கவலைப்படவில்லை என்றும் கூறி உள்ளோம். மேலும், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டுமென அவருக்கு அழுத்தம் தரவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தி உள்ளோம். அவரது விளக்கத்தை தொடர்ந்து விரிவான விவாதமும் நடத்தப்பட வேண்டும்.
பிரதமர் மோடி மணிப்பூருக்கு நேரில் சென்று, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய கோரிக்கை. இனியும் தாமதிக்காமல் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட மணிப்பூர் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளோம். மணிப்பூர் மக்களின் துன்பத்தைத் தணிப்பதில் ஜனாதிபதியின் ஆதரவும் தலையீடும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளோம். கடந்த 92 நாட்களில் நடந்த அழிவுகளுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்குவதற்கான தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். எங்கள் மனுவை பெற்றதும், கோரிக்கைகளை பரிசீலிப்பதாக ஜனாதிபதி உறுதி அளித்தார். இவ்வாறு மல்லிகார்ஜூனா கார்கே கூறினார். இந்த சந்திப்பின் போது, காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, கனிமொழி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்ட எம்பிக்கள் உடன் சென்றிருந்தனர்.
The post மணிப்பூர் விவகாரத்தில் தலையிட கோரி ஜனாதிபதியுடன் ‘இந்தியா’ எம்.பி.க்கள் சந்திப்பு: பிரதமர் மோடி நேரடியாக சென்று அமைதி ஏற்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தல் appeared first on Dinakaran.