மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக மணிப்பூர் மாநில அரசு அறிவிப்பு

மணிப்பூர் : மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக அறிவித்துள்ளனர். பதற்றம் தணிந்துள்ள 5 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக மணிப்பூர் மாநில அரசு அறிவித்துள்ளது. மணிப்பூரில் 3 மே 2023 அன்று சுராசந்த்பூரில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி அமைதியான முறையில் முடிவடைந்ததை அடுத்து கலவரம் வெடித்தது.

மணிப்பூர் மாநிலத்தில், ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் சில மணிநேரங்களுக்கு தடை உத்தரவுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஆயுதங்களை ஒப்படைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்டீ சமூகத்தின் தங்களை பழங்குடி இனத்த்ல் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு பழங்குடி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த மாதம் 3-ம் தேதி மணிப்பூர் பட்டியலின மாணவ அமைப்பினர் மணிப்பூரில் 10 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியில் திடீரென மோதல் வெடித்ததால் அது கலவரமாக மாறியது. இதில் பல்வேறு வாகனங்கள், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அம்மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவியது.

போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் மற்றும் துப்பாக்கிச் சண்டைகள் அதிகரித்தன. இந்த வன்முறையில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மணிப்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவை முடக்கப்பட்டது. மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித்ஷா, மணிப்பூரில் வெடித்த மோதல்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நீதி விசாரணை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயின் கீழ் அனைத்து அரசியல் கட்சிகள், குக்கி மற்றும் மெய்டே சமூகங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அமைதிக் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

The post மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக மணிப்பூர் மாநில அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: