இடைநின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க மாவட்டத்தில் 1165 பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்

*முன்னாள் மாணவர்களுக்காக இணையதளம் உருவாக்கம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 1165 தொடக்க, நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. இதில் பள்ளி செல்லாத, இடையில் நின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.தர்மபுரி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 1,607 பள்ளிகள் உள்ளன. இதில் தர்மபுரி, அரூர் தொடக்க கல்வி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் 1,165 உள்ளன. இதில், சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தர்மபுரி தொடக்கக்கல்வி மாவட்டத்தில் மட்டும் 647 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், அரூர் தொடக்கக்கல்வி மாவட்டத்தில் 518 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. அரசு பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்களை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுவரை பள்ளியில் இடையில் நின்ற 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்கள் 200 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மாணவர்களை சேர்க்கும் பணியில் பள்ளிக்கல்விதுறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அரசு பள்ளிகளில சேர்க்கை தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 1165 தொடக்க, நடுநிலைப்பள்ளியில் ஜூலை மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் முக்கிய அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு செய்வது, தொடர்ந்து உயர்கல்வி வரை படிக்க வழிகாட்டுவது, இடையில் நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. தர்மபுரி நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

பள்ளிகளின் வளர்ச்சியில் மேலாண்மை குழு உறுப்பினர்களின் பங்குகள் மற்றும் கடமைகள் அதிகம் உள்ளன. அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் அங்கு படித்த முன்னாள் மாணவர்களை பங்குபெறச் செய்ய வேண்டும். இதற்காக பள்ளிக் கல்வித் துறையால் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://nammaschool.tnschools.gov.in என்ற இணையதளத்தில் அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், தங்கள் விவரங்களை பதிவு செய்து, முன்னாள் மாணவர்கள் மன்றத்தில் இணைய வேண்டும். அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை எடுத்து வரும் முயற்சிகளுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் நான் முதல்வன், பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கவேண்டும். இல்லம் தேடிக் கல்வி, 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்த அறிமுகப் படுத்தப்பட்டு உள்ள எண்ணும் எழுத்தும் திட்டம் , மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மேலாண்மை குழு, உறுப்பினர்கள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி அலுவலர் ரவிக்குமார், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மான்விழி, சகீல், கல்வி அதிகாரி சீனிவாசன் மற்றும் தர்மபுரி பள்ளி துணை ஆய்வாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post இடைநின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க மாவட்டத்தில் 1165 பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: