அயோத்தி ராமர் கோயில் உற்சவருக்கு 24 மணி நேரத்தில் மரத்தில் பல்லக்கு : மாமல்லபுரம் சிற்ப கலைஞருக்கு குவியும் பாராட்டுகள்

மாமல்லபுரம் : அயோத்தி ராமர் கோயில் உற்சவருக்கு மரத்தில் பல்லக்கு 24 மணி நேரத்தில் செய்து மாமல்லபுரம் சிற்பக் கலைஞர் அசத்தியுள்ளார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் ராமர் பிறந்த இடமான அயோத்தியின் ராம ஜென்ம பூமியில், ராமருக்கு தரை தளத்தில் இருந்து 44 வாசல்களை கொண்டு, ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் 1600 சிற்பக் கலைஞர்கள் மூலம் ₹1800 கோடி மதிப்பில், பிரமாண்டமாக கோயில் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ராமர், சீதைக்கு கருவறைகள் அமைக்கப்படுகிறது.உலக அளவில் உள்ள இந்து மக்கள் உள்ளிட்ட பலரும் வியந்து பார்க்கும் வகையில், வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த உத்தரபிரதேச அரசு தயாராகி வருகிறது. அங்கு, ராம்லல்லா உருவத்தில் ராமரை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும், கோயில் கட்டுமான பணிக்கு முன்பு பாலாலயம் செய்து ராமரை (உற்சவர் மூர்த்தி) அங்கு வெளிப் பகுதியில் வைத்து பக்தர்கள் தினமும் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கட்டப்பட்டு வரும் கோயிலின் கருவறையில் மீண்டும் உற்சவர் மூர்த்தியை தூக்கி சென்று வைக்க ஏற்பாடு செய்து, கோயில் நிர்வாகம் உற்சவருக்கு 3 அடி நீளம், 2 அடி அகல் கொண்ட மரத்தில் பல்லக்கு செய்ய ஷேத்ரா ராம ஜென்ம பூமி அறக்கட்ளை நிர்வாகம் மூலம் மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி பகுதியில் இயங்கும் மானசா மரச்சிற்பக் கலை கூட உரிமையாளரும், சிற்பக் கலைஞருமான ரமேஷ் என்பவருக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது.

பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் ஆர்டர் கொடுக்கப்பட்டாலும் அதனை செய்து முடித்து 24 மணி நேரத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைத்து அசத்தி உள்ளார் சிற்பக்கலைஞர் ரமேஷ். ஆர்டர் பெறப்பட்டு 24 மணி நேரத்தில் மரத்தில் பல்லக்கு செய்வது சாத்தியம் இல்லையென்றாலும், அதனை ஒரே நாளில் செய்து முடித்து சாத்தியம் என சாதித்துக் காட்டிய சிற்பக்கலைஞர் ரமேஷை சக சிற்பக் கலைஞர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இவர், ஏற்கனவே கடந்தாண்டு அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி சிற்பமும், மகாராஷ்டிரா மாநிலம் பலார்ஷா காடுகளில் இருந்து எடுத்து வரப்பட்டு பல நூறு ஆண்டுகள் நிலைத்து இருக்கக் கூடிய 48 தேக்கு மரக் கதவுகளை செய்தும் அனுப்பி வைத்துள்ளார். அதில், 12 கதவுகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டு அங்கு பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிற்ப கலைஞர் ரமேஷ் கூறுகையில், ‘‘முன்னர் தென் மாநிலங்களில் மட்டுமே தமிழக சிற்ப கலைஞர்களுக்கு ஒரு மரியாதை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று உலகமே வியந்து பார்க்கும் வகையில் ராமர் கோயில் கட்டுமானப் பணி மட்டுமின்றி வட மாநிலங்களில் தமிழக சிற்பக் கலைஞர்களுக்கு வடமாநிலங்களில் மிகப் பெரிய வரவேற்பும், ஒரு மரியாதையும் அளிக்கப்படுகிறது. ராமர் கோயில் கட்டுமான பணியில் தமிழரின் பங்கு உள்ளது என நினைக்கும்போது, பெரும் மகிழ்ச்சியாக உள்ளது,’’ என்றார்.

The post அயோத்தி ராமர் கோயில் உற்சவருக்கு 24 மணி நேரத்தில் மரத்தில் பல்லக்கு : மாமல்லபுரம் சிற்ப கலைஞருக்கு குவியும் பாராட்டுகள் appeared first on Dinakaran.

Related Stories: