×

குமரி மாவட்டத்தில் 6 கடற்கரை கிராமங்களில் மலேரியா தடுப்பு மருந்து தெளிப்பு பணி

*பொதுமக்கள் ஒத்துழைக்க சுகாதாரத்துறை வேண்டுகோள்

நாகர்கோவில் : குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பு: பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை மூலம் தமிழ்நாட்டில் தொற்று நோய்களான பெரியம்மை, நரம்புச் சிலந்தி, போலியோ போன்ற நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது கொசுக்களால் பரவும் நோய்களான மலேரியா மற்றும் யானைக்கால் நோயினை 2027ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்கும் இலக்கினை நோக்கி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 2030ல் மலேரியா இல்லாத இந்தியா படைக்க ஒன்றிய, மாநில அரசுகள் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

உலக மலேரியா தினம் ஏப்ரல் மாதம் 25ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2025ல் மலேரியா முடிவுக்கு வருகிறது. மேலும் ஜூன் மாதத்தில் மலேரியா எதிர்ப்பு மாதம் அனுசரிக்கப்பட்டு நோயினை கட்டுப்படுத்த அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கும் பொருட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில், பொதுமக்கள் கூடும் இடங்களில் மலேரியா நோய் பற்றிய விழிப்புணர்வு சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

மலேரியா நோய் பருவ மழை தொடங்கும் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அதிகமாக பரவும் தன்மை உடையது.

மலேரியா காய்ச்சல் முன் தடுப்பு பணி மேற்கொள்ள வீடுகளில் உள்பகுதிகளில் மருந்து தெளிக்க வரும் களப்பணியாளர்களுக்கு வீட்டின் உள்பகுதியில் காணப்படும் பொருட்களை அப்புறப்படுத்தி மருந்து தெளிப்பு பணியினை சிறப்பாக செயல்படுத்திட முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் மாவட்ட சுகாதார அலுவலரின் அறிவுரைப்படி மாவட்டத்தில் மலேரியா நோய் தாக்கம் காணப்பட்ட கடற்கரை கிராமங்களான கோவளம் (1369 வீடுகள்), அழிக்கால் (522 வீடுகள்), முட்டம் (1461 வீடுகள்), வாணியக்குடி (782 வீடுகள்), குறும்பனை (899 வீடுகள்) மற்றும் இனையம் (1975 வீடுகள்) ஆகிய கிராமங்களில் இந்த மருந்து தெளிப்பு பணி 25 களப்பணியாளர்கள் மூலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் ஜூன் மாதம் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும்.

ஆகையால் பொதுமக்கள் இந்த மருந்து தெளிப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி மலேரியா நோய் இல்லாத மாவட்டமாக திகழ அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டம் கடந்த மூன்று வருட காலமாக மலேரியா காய்ச்சல் இல்லாத மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

மலேரியா அறிகுறிகள்

பொதுமக்கள் யாருக்காவது காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை அல்லது மருத்துவ கல்லூரிக்கு சென்று ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான முறையான சிகிச்சை பெற்றுகொள்ள வேண்டும். மருத்துவம் பயிலாத நபர்களிடம் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

குளிர் காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்று வலி, மாலை நேரத்தில் காய்ச்சல் விட்டு விட்டு வருவது மலேரியா காய்ச்சலின் அறிகுறியாகும். மலேரியா நோயினைப் பரப்பும் ஆனோபிலஸ் கொசுக்கள் சுத்தமான நீர் நிலைகளில், கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலை தொட்டி ஆகியவற்றில் உற்பத்தியாகிறது.

ஆய்வகங்களில் பரிசோதனை

மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக களப்பணியாளர்கள் சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக பொதுமக்களிடமிருந்து மக்கள் தொகையில் 1 சதவீத காய்ச்சல் கண்காணிப்பு பணியின் வாயிலாக ரத்த தடவல்கள் சேகரித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் எவருக்கேனும் மலேரியா ஒட்டுண்ணி கண்டறியப்பட்டால் உடனடியாக மலேரியா மருந்துகள் வழங்கி முழு சிகிச்சை வழங்கப்படும்.

மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரும் நோயாளிகளில் 15 சதவீத நோயாளிகளுக்கு ரத்த தடவல்கள் சேகரித்து ஆய்வகத்தில் மலேரியா பரிசோதனை செய்யப்பட்டு மலேரியா ஒட்டுண்ணி கண்டறியப்பட்டால் உடனடியாக பூரண சிகிச்சை வழங்கப்படும்.

The post குமரி மாவட்டத்தில் 6 கடற்கரை கிராமங்களில் மலேரியா தடுப்பு மருந்து தெளிப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Health Department ,Nagercoil ,Kumari District News Public Relations Office ,Public Health and Prevention Department ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு