மகேந்திரா சிட்டி, சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: செங்கல்பட்டு வட்டாட்சியர் நடவடிக்கை

செங்கல்பட்டு: மகேந்திரா சிட்டி சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் செங்கல்பட்டு வட்டாட்சியர் முன்னிலையில் அகற்றப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டி முதல் பல்லாவரம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் நாளுக்கு நாள் இடத்தை ஆக்கிரமித்து புதிதுபுதிதாக கடைகள் அமைக்கப்படுகின்றன. இதில் டீக்கடை, இளநீர், உணவகம், தள்ளுவண்டி கடைகள் செயல்பட்டு வந்ததன.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று வரும் வாகனங்கள் ஆக்கிரமிப்பு கடைகள் அருகில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விபத்து ஏற்பட்டு உயிர் இழப்புகளும் அதிகளவில் ஏற்படுகின்றன. இந்தநிலையில பொதுமக்களின் பல்வேறு புகார்களை ஏற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் தலைமையில் இதுகுறித்த பிரத்யேக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், வட்டாட்சியர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை முன் வைத்தனர்.

கூட்டத்தின் முடிவில் சாலையோர கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி தலைமையில் முதற்கட்டமாக மகேந்திரா சிட்டி, திருத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. அப்போது போக்குவரத்து காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்துறையினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் :

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட தென்பாதி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான குடும்பத்தினர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் சாலையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆத்தூர் தென்பாதி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு வழங்கினர்.

அதில், 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் எங்களை அகற்றிவிட்டு சாலை விரிவிக்கம் செய்யும் நெடுஞ்சாலைதுறையினர் மாற்று இடத்தில் இடம் ஒதுக்கி கொடுத்தால் எப்படி அந்த இடத்தில் வசிக்க முடியும் என அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். திடீரென குடியிருப்புகளை காலி செய்ய உத்தவிட்டால் வீடுகளை காலி செய்துகொண்டு எங்கு செல்வது? பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் படிப்பு கடுமையாக பாதிக்கப்படும். வேலைக்கு செல்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குடியிருப்புகளை காலி செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.

The post மகேந்திரா சிட்டி, சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: செங்கல்பட்டு வட்டாட்சியர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: