மதுரையில் ரயில் பெட்டி தீ விபத்து: 2-வது நாளாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை

மதுரை: மதுரையில் தீ விபத்து ஏற்பட்டு ரயில் பெட்டி எரிந்த இடத்தில் 2-வது நாளாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து ஆன்மீக சுற்றுலாவிற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலையில் மதுரை வந்தடைந்தனர். இவர்களின் ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த தீ விபத்தில் லக்னோவைச் சேர்ந்த பரமேஸ்வரர் தயாள் குப்தா (55), மிதிலேஷ் குமாரி (62), சந்திர மன்சிங் (65), நிதீஷ்குமாரி (62), சாந்தி தேவி வர்மா (65), குமாரி ஹேமானி, டேனியல் மனோரமா உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ரயில்பெட்டியில் இருந்த பயணிகள் சட்டவிரோதமாக பயன்படுத்திய சிலிண்டரால் விபத்து நேரிட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் தென்னக ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ரயில்வே போலீசார் சார்பில், தெற்கு ரயில்வே காவல் கூடுதல் இயக்குனர், தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார். 1-வது நாளாக நேற்று காவல்துறையின் தடயவியல் குழுவினர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, விபத்துக்குள்ளான பெட்டிக்குள் எரிந்த நிலையில், கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டு உள்ளிட்ட பொருட்களை மீட்டனர். மேலும், சிலிண்டர் வெடித்து சிதறிய பாகங்களும் சேகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரித்துள்ளனர்.

இந்நிலையில், தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி நேற்று மதுரை வந்தார். அவர் விபத்துக்குள்ளான பெட்டியைப் பார்த்து ஆய்வு செய்தார். விபத்தில் காயமடைந்து மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, தப்பியோடிய 2 சமையல் ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்துள்ளனர். அவர்களிடமும் பாதுகாப்பு ஆணையர் விசாரித்தார். பிறகு கோட்ட ரயில்வே மேலாளர் ப. அனந்த் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தீவிபத்துக்கான காரணம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

இதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மதுரையில் நடந்த ரயில் பெட்டி தீ விபத்து குறித்து உரிய விசாரணை முறையாக நடக்கிறது. விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிவில் தெரியவரும். சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டோர் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுப்பர்.
விபத்தில் காயமடைந்து சிகிச்சையிலுள்ளவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டி இருப்பதால் அவர்களிடம் விரைவாக விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளோம்.

சுற்றுலா ரயில் பெட்டிகள், பயணிகளுக்கான ரயில் பெட்டிகள் இனிவரும் காலங்களில் இதுபோல் விபத்து நடக்காமல் இருக்க, உரிய விதிமுறைகளை கடுமையாக வகுக்கப்படும். இவ்விபத்து தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சதித் திட்டம் எதுவுமில்லை எனத், தெரியவந்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும்”, என்று அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ப. அனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். இந்நிலையில் 2வது நாளாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி இன்று சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்துகிறார்.  ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், ஆர்.பி.எப். அதிகாரிகளிடம் விசாரணை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

The post மதுரையில் ரயில் பெட்டி தீ விபத்து: 2-வது நாளாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: