மத்தியபிரதேச தேர்தலில் சீட் கேட்டு 4,000 பேர் விண்ணப்பம்: காங். தலைவர் கமல்நாத் தகவல்

போபால்: வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் சீட் கேட்டு 4,000 பேர் விண்ணப்பித்திருப்பதாகவும், சீட் கிடைக்காத அதிப்தி தலைவர்களும் கட்சியின் வெற்றிக்காக பணியாற்றுவார்கள் என நம்புவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் கூறி உள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 17ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக காங்கிரஸ் சார்பில் 114 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், வேட்பாளர் தேர்வு குறித்து மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் நேற்று கூறியதாவது: வேட்பாளர் தேர்வில் கட்சியின் நோக்கம் சமூக நீதியை நிறைவேற்றுவதாகும். அதே சமயம், அனைத்து சாதிகளுக்கும் சமமான உரிய பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். இம்முறை சீட் கேட்டு 4,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அனைவருக்கும் சீட் தர முடியாது. அதற்கு சாத்தியமில்லை. சீட் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருமே வாய்ப்பு தந்தால் வெற்றி பெற்று காட்டுவோம் என்கின்றனர். எனவே, வேட்பாளர் தேர்வு என்பது சவாலான பணி. இருப்பினும், சீட் கிடைக்காமல் அதிருப்தி அடைந்த தலைவர்களும் கட்சியின் வெற்றிக்காக பணியாற்றுவார்கள் என நம்புகிறேன்.

இன்னும் 2, 3 நாளில் மீதமுள்ள இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவிப்போம். இந்த தேர்தல் வேட்பாளர்களுக்கும், கட்சிகளுக்கும் இடையிலானது அல்ல. இது மத்திய பிரதேசத்தின் எதிர்காலத்திற்கானது. தற்போதைய பாஜ அரசு மாநிலத்தை அழித்து விட்டது. ஊழலில் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில் பாஜ மற்றும் பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு சீட் தரப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்நாத், ‘‘உள்ளூர் கட்சி நிர்வாகிகள் ஒப்புதலுக்குப் பிறகுதான் மாற்று கட்சியினர் கட்சியில் சேர்க்கப்பட்டனர்’’ என்றார்.

* இந்தியா கூட்டணி கட்சிகள் இணையுமா?
காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் மபி சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி சேருமா என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்நாத், ‘‘இந்தியா கூட்டணியின் கவனம் மக்களவை தேர்தலே. அதை குறிவைத்தே எங்களின் ஆலோசனைகள் நடக்கின்றன. அதேசமயம் மத்தியபிரதேசத்திலும் கூட்டணி அமைந்தால் நல்லதுதான். இல்லையென்றாலும் எந்த பிரச்னையும் இல்லை. ஏனெனில் மாநில அளவில் சில நடைமுறை சிக்கல் இருக்கின்றன’’ என்றார். மபியில் கடந்த 2018ல் தேர்தலில் ஒரு தொகுதியில் வென்ற சமாஜ்வாடி இம்முறை 230 தொகுதியிலும் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது. சமாஜ்வாடி 9 வேட்பாளர்களையும், ஆம் ஆத்மி கட்சி 39 வேட்பாளர்களையும் இதுவரை அறிவித்துள்ளன.

The post மத்தியபிரதேச தேர்தலில் சீட் கேட்டு 4,000 பேர் விண்ணப்பம்: காங். தலைவர் கமல்நாத் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: