×

539 மக்களவை தொகுதிக்கு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் 539 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி 539 மக்களவைத் தொகுதிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாடு முழுவதும் 539 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மீதமுள்ள நான்கு பகுதிகளுக்கான பட்டியல் விரைவில் வெளியாகும். தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ‘இந்தியா’ கூட்டணி வெல்லும்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘புதியதாக நியமிக்கப்பட்ட 539 மக்களவைத் தொகுதிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களும், அந்தந்த தொகுதியில் கட்சியின் செல்வாக்கு உள்ளிட்ட விபரங்களை சேகரித்து தருவார்கள்.

‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சியின் 5 பேர் கொண்ட தேசிய கூட்டணி குழு, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும். அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். பஞ்சாப், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து இன்று (திங்கள்கிழமை) பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது’ என்றனர்.

The post 539 மக்களவை தொகுதிக்கு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Congress party ,New Delhi ,Congress ,General Secretary ,Dinakaran ,
× RELATED புதிய நிர்வாகிகள் நியமனம் காங். கட்சி...