அரியலூர்: அரியலூர் செந்துறை அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ம் தேதி நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இது ஆரோக்கியநாதபுரம், ஊருகுடிக்கு இடம் பெயர்ந்தது. செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு, ஊருகுடி, மறையூர், மயிலாடுதுறை ரயிலடியில் 30 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மேலும் பழூர், ஊருகுடி, ரயிலடி, அசிகாடு, மறையூர் பகுதியில் 9 கூண்டுகள் வைத்தும் சிறுத்தை சிக்கவில்லை.
இந்நிலையில் ஆரோக்கியநாதபுரத்தில் இருந்து 22 கிமீ தொலைவில் உள்ள குத்தாலம் காஞ்சிவாய் அக்ரஹார தெருவில் கடந்த 7ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்தது. அதன்பேரில் நாகை மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தலைமையில் வனத்துறையினர் சென்று பார்த்தபோது சிறுத்தையின் காலடி தடம் இருந்தது. காஞ்சிவாய் பெருமாள் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் சிறுத்தை நடமாட்டம் பதிவாகியிருந்தது. இதைதொடர்ந்து ஆரோக்கியநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் வைத்திருந்த கூண்டுகள் அகற்றப்பட்டு, காஞ்சிவாய், பேராவூர், கொத்தங்குடி பகுதியில் உள்ள நண்டலாறு, வீரசோழனாறு, மகிமலையாறு ஆற்றங்கரையோரம் கடந்த 8ம் தேதி 7 கூண்டுகள் வைக்கப்பட்டது.
காஞ்சிவாய், நரசிங்கம்பேட்டை பகுதியில் 45 சென்சார் கண்காணிப்பு கேமரா, ஆறு, ஓடைகள் அருகே 25 கேமரா, மயிலாடுதுறை ரயிலடி அருகே உள்ள காவிரியை ஒட்டிய பகுதியில் 19 கேமராக்கள் என மொத்தம் 89 ேகமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும் சிறுத்தை சிக்காததால் 7 கூண்டுகளை அகற்றி காஞ்சிவாய், பேராவூர், தஞ்சை மாவட்ட எல்லையான எஸ்.புதூர், சாத்தனூர் பகுதியில் நேற்று வைக்கப்பட்டது. இது வரை சிறுத்தை சிக்கவில்லை. குத்தாலம், மயிலாடுதுறை பகுதியில் இன்று 10வது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் செந்துறை அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
செந்துறை அருகே சிறுத்தை சுவரில் ஏறி குதிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. சுற்றுக்காவல் பணியில் இருந்த காவலர்களும் சிறுத்தையை நேரில் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அரியலூரில் சிறுத்தை தென்பட்டதை அடுத்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தை செந்துறைக்கு இடம்பெயர்ந்ததா அல்லது மற்றொரு சிறுத்தையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரியலூர் செந்துறை அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை appeared first on Dinakaran.