ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் இடவசதி, பாதுகாப்பின்றி மக்கள் பரிதவிப்பு

ஆவடி: ஆவடியில் இடமாற்றம் செய்யப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் போதிய இடவசதி இன்றி, அங்கு பதிவு செய்ய வரும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பணப்புழக்கம் நிறைந்த அலுவலகத்தில் சிசிடிவி காமிரா மற்றும் புறக்காவல் நிலைய பாதுகாப்பு இல்லாததால், அங்கு வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவற்றை தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இடவசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே குளக்கரை தெருவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆவடி சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வந்தது. அந்த அலுவலகம் குறுகிய படிக்கட்டுகளுடன், முதல் தளத்தில் அமைந்திருந்ததால் பத்திரப்பதிவு செய்வதற்கு வரும் பொதுமக்கள் கழிவறை வசதி மற்றும் பாதுகாப்பு இன்றி பல்வேறு வகைகளில் அவதிப்பட்டு வந்தனர். இதை கருத்தில் கொண்டு, ஆவடி சார்பதிவாளர் அலுவலகம் பட்டாபிராம், அண்ணா நகர், ‘மாடர்ன் சிட்டி’ 8வது தெருவில் அரசு உயர்நிலை பள்ளி எதிரே ஒரு தனியார் கட்டிடத்தின் கீழ்த்தளத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த சார்பதிவாளர் அலுவலகம் பட்டாபிராம், அண்ணாநகர் பிரதான சாலையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது.
இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் ஆவடி நகராட்சி, பூந்தமல்லி, வில்லிவாக்கம் ஊராட்சி மற்றும் திருநின்றவூர் நகராட்சி பகுதிகளை சேர்ந்த 33 கிராமங்களை சேர்ந்த மக்கள் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் பணியில் இருக்கும் சார்பதிவாளர் பாரபட்சமின்றி அதிகளவில் பணம் லஞ்சமாக பெறுவதாகவும், பணம் தரவில்லை என்றால் பத்திரத்தில் வில்லங்கம் உள்ளது என அலைக்கழிப்பதாகவும் கூறப்படுகிறது.

இங்கு துணை சார்பதிவாளர் பணியிடம் காலியாகவே உள்ளது. அவ்வாறு யாரேனும் வந்தாலும், அவர்களுக்கு பணத்தை பிரித்து தர மனமின்றி சார்பதிவாளர் விரட்டியடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அலுவலகத்தில் நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்டோர் வரும் நிலையில், ஒரே ஒரு பொது கழிவறைதான் உள்ளது. அதையும் அலுவலக ஊழியர்கள் பயன்பாடு என பூட்டியே வைத்துள்ளனர். மேலும், இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் வாகன நிறுத்துமிட வசதியும் இல்லை. இதனால் சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அங்கு போக்குவரத்து நெரிசலுடன் வாக்குவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

மேலும், இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் நாளொன்றுக்கு பல லட்சம் மதிப்பிலான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. நிலத்தை பதிவு செய்பவர்கள் கொண்டு வரும் பணத்துக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. ஏனெனில், இந்த அலுவலகத்தில் சிசிடிவி காமிரா கண்காணிப்பு மற்றும் புறக்காவல் சோதனை மையம் அமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் பதிவு செய்வதற்கு கொண்டு வரும் பணத்தை சிலர் வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
எனவே, ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளரின் பல்வேறு முறைகேடுகளை களையவும், அங்கு பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் . புறக்காவல் .மையத்தை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் இடவசதி, பாதுகாப்பின்றி மக்கள் பரிதவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: