கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*பூந்தி செய்யும் போது இட்லி மாவு பதத்தில் கடலை மாவைக் கரைத்து, அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, ஜல்லிக் கரண்டியை வாணலி அருகில் வைத்து தட்டினால் பூந்தி குண்டு குண்டாக விழும்.

* செளசௌ, பீர்க்கங்காயின் தோல்களை எண்ணெயில் வதக்கி, மிளகாய், புளி, உப்பு சேர்த்து துவையல் சட்னி செய்து சாப்பிடலாம்.

* விளாம்பழ ஓட்டினைத் தூக்கிப் போடாமல் கொதிக்கும் ரசத்தில் போட்டால் வாசனை, ருசி இரண்டும் சூப்பராக இருக்கும்.

– எம்.ஜோதி, சென்னை.

* தோசைக்கு மாவு அரைக்கும் போது அத்துடன் மூன்று வெண்டைக்காய்களை போட்டு அரைத்தால் தோசை மிகவும் சுவையாக இருக்கும்.

* வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடி செய்து பக்கோடாவில் கலந்து செய்தால் கரகரப்பாக இருக்கும்.

* இட்லி தட்டில் இட்லி மாவை ஊற்றிய பின் சிறிது மிளகைப் பொடித்து இட்லி மீது தூவினால் இட்லி கமகமவென மணமாக இருக்கும்.

– கே.கவிதா, வேலூர்.

*முள்ளங்கி இலையை எண்ணெய் விட்டு வதக்கி, மிளகாய் வற்றல், உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தை வறுத்து சேர்த்து துவையல் அரைத்தால் சுவையாக இருக்கும்.

* பரோட்டா செய்ய மாவு பிசையும் போது குடிக்கிற சோடாவை தண்ணீருக்குப் பதிலாக ஊற்றி பிசைந்து பாருங்கள். பரோட்டா மிருதுவாக, பஞ்சு போல் மெத்து மெத்தென்று வரும்.

* பஜ்ஜி மாவில் நான்கைந்து பூண்டு பற்களை அரைத்து ஒரு ஸ்பூன் சீரகப்பொடி கலந்து பஜ்ஜி செய்தால் சுவை ஆஹாதான்.

– ஹெச்.ராஜேஸ்வரி, சென்னை.

* கறிவேப்பிலை தழைகள் காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினிய பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.

* ரவையை வறுக்கும் போது சிட்டிகை உப்புத் தூள் கலந்து வறுத்தால் நீண்ட நாட்கள் புழுக்கள் அண்டாது.

* காபிக்கு பயன்படுத்தும் தண்ணீரை அதிகம் கொதிக்க விட்டால் அதன் சுவை குறைந்திடும்.

– கே.விஜயலட்சுமி, திருவண்ணாமலை.

*சேமியா பாயசத்திற்கு சாதாரண பால் பாதியும், தேங்காய்ப்பால் பாதியுமாக கலந்து செய்தால் சுவையாக இருக்கும்.

*வாணலியை சூடாக்கிய பின்பே அதில் சமையல் எண்ணெயை ஊற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எண்ணெய் சூடாக அதிக நேரம் பிடிக்கும்.

* தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் தயார் பண்ணும்போது, கடலைப்பருப்புக்கு பதிலாக பொரிகடலை போட்டால், சுவையாகவும், வாயுத் தொல்லை இல்லாமலும், சத்து
அதிகமாகவும் இருக்கும்.

– அனிதா நரசிம்மராஜ், மதுரை.

* வற்றல் குழம்பு, வெந்தய குழம்பு சுவையாக மணமாக இருக்க துவரம்பருப்பை தாளிக்கும் சாமான்களுடன் அதிகமாக சேர்க்கலாம்.

* அடை செய்யும் போது துவரம்பருப்பை கூடுதலாக சேர்த்து அரைத்து செய்ய அடை ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

*ஆரஞ்சு ஜூஸ் செய்யும் போது சிறிதளவு உப்பு, எலுமிச்சை சாறு சேர்க்க வித்தியாசமான ருசி, மணத்துடன் சாப்பிட தூண்டும்.

– ராஜிகுருஸ்வாமி, சென்னை.

* முறுக்கு வெண்மையாக இருக்க வேண்டுமானால் ஒரு கிலோ அரிசிக்கு கால்கிலோ உளுத்தம் பருப்பு வறுத்துப் போட்டு மாவாக்கி முறுக்கு செய்ய வேண்டும். பெருங்காயம் சேர்க்கக் கூடாது.

* காலையில் பிசைந்த சப்பாத்தி மாவு மீதமாகி இருந்தால் அப்படியே ஹாட்பேக்கில் போட்டு, மூடி வைத்து, மாலையில் அந்த மாவைக் கொண்டு சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும்.

* பொரியலுக்கு போட வைத்திருக்கும் தேங்காய் துருவல் இளசாக இருந்தால் சிறிது வறுத்து பொரியலில் சேர்த்தால் பொரியல் அதிக நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

– ஆர்.யமுனா, காஞ்சிபுரம்.

புளி மிளகாய்

காரம், புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த பச்சடி. இதை இட்லி, தோசை மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையானவை:
சின்ன வெங்காயம் – 20,
பச்சை மிளகாய் – 10,
புளி – சிறிய எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்,
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுந்து – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிய துண்டு,
கறிவேப்பிலை – 20 இலைகள்,
வெல்லம் – சிறிய துண்டு,
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புளியை 1/2 கப் சூடான நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் 1 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி பின் பொடியாக அல்லது பாதியாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் போட்டு சிவந்ததும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புளிக்கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து கொதிக்க விடவும். சிறிது கொதி வந்ததும் பெருங்காயத்துண்டு சேர்த்துக் கொள்ளவும். புளி மிளகாய் கெட்டியாகும் போது வெல்லம் மற்றும் கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை கொதித்ததும் இறக்கவும்.

– அமுதா அசோக்ராஜா, திருச்சி.

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: