நன்றி குங்குமம் தோழி
*அகத்திக் கீரை, வெந்தயக்கீரை சமைக்கும் போது சிறிதளவு வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்தால் சுவை கூடும். கசப்பு இருக்காது.
*வடை மாவில் பொடியாக நறுக்கிய கீரை, கோஸ், வாழைப்பூ போன்ற வற்றைச் சேர்த்தால் சுவை கூடும். உடம்புக்கும் நல்லது.
*இஞ்சி சாறு, சிறிது புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து விட்டால் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். ஜீரணமும் ஆகும்.
*சாம்பார் நீர்த்துவிட்டால் சிறிது பச்சரிசி மாவை நீரில் கரைத்து கொதிக்கும் சாம்பாரில் சேர்த்தால் பதமாகிவிடும்.
– எஸ்.ராஜம், திருச்சி.
*தோசைக்கு ஊறவைக்கும் போது கைப்பிடி அளவு துவரம் பருப்பு சேர்த்தால் தோசை வாசனையாகவும், முறுகலாகவும் இருக்கும்
*பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். பாகற்காய்களை இரண்டிரண்டாக நறுக்கி வைத்துவிட்டால் பழுக்காமல் இருக்கும்.
*ஜாம் பாட்டிலில் ஜாம் தீர்ந்து போனால் அதில் பாலை ஊற்றுங்கள். பாட்டிலில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஜாம் பாலுடன் கலந்து கரைந்துவிடும். பிறகு அந்தப் பாலை அருந்தினால் சுவையாக இருக்கும். ஜாமும் வீணாகாது.
*சிறு இளசான புடலங்காயை விதை நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு பிசறி பிழிந்து, பச்சடியில் கலந்து உபயோகிக்கலாம். நறுக்கிய புடலங்காயை ஒரு ஸ்பூன் எண்ணெயை விட்டு வதக்கியும் பச்சடியில் சேர்க்கலாம். அதன் சுவையே அலாதிதான்.
– பிரபாவதி, கன்னியாகுமரி.
*மாங்காய் தொக்கு செய்யும் போது நெல்லிக்காய் அளவு வெல்லம் போட்டுக் கிளற மாங்காய் தொக்கு சுவையாக இருக்கும்.
*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது, வரும் நெடி நம்மை கஷ்டப்படுத்தும். அதை தவிர்க்க மிளகாயுடன் சிறிது உப்பு போட்டு வறுத்தால் இருமல், நெடி ஏற்படாது.
*உளுந்தம் பருப்பு வடை செய்யும் போது சிறிது ஐஸ்கட்டியை சேர்த்து அரைத்து தேங்காய்த் துருவல் கலந்து வடை செய்தால் தயிர்வடை இதமாகவும், சுவையாகவும் இருக்கும்.
– கே.எல்.புனிதவதி, கோவை.
*பருப்பு உசிலிக்கு அரைத்த விழுதை ஆவியில் வேகவைத்துவிட்டு பருப்புஉசிலி தயாரிக்க எண்ணெய் பிடிக்காது. உடலுக்கும் ஆரோக்கியமானது.
*பருப்பு உருண்டைக் குழம்பு தயாரிக்க பருப்போடு ஒரு கைப்பிடி கொள்ளையும் சேர்த்து அரைக்க வாயு தொந்தரவு இருக்காது.
– இந்திரா கோபாலன், திருச்சி.
*பாகற்காய் பொரியல் செய்யும்போது ஒரு மாங்காயையும் பொடியாக நறுக்கி சேர்த்து பொரியல் செய்தால் கசப்பே இருக்காது.
*இட்லிக்கு உளுந்து அரைக்கும்போது இரண்டே இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் விட்டு அரைத்தால் இட்லி மல்லிகை பூப்போல இருக்கும்.
*மோர் குழம்பில் கற்பூரவல்லி இலைகளை போட்டு பக்குவப்படுத்தி சாப்பிட்டால் நல்ல மணமும், ருசியும் இருக்கும்.
*நெய் வைத்துள்ள பாத்திரத்தில் ஒரு வெல்லத் துண்டை போட்டு வைத்தால் நெய் நீண்ட நாட்கள் கெடாது.
– க.நாகமுத்து, திண்டுக்கல்.
*காலிஃப்ளவர் பூவை சின்னச் சின்னதாக நறுக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து மசால் வடை மாவுடன் கலந்து வடையாக தட்டிப் போட சுவையான காலிஃப்ளவர் வடை ரெடி.
*பச்சைக் காய்கறிகளை பொடிப் பொடியாக நறுக்கி தயிர் சேர்த்து உப்புப் போட்டு, சீரகப்பொடி தூவினால் தயிர் பச்சடி மிகவும் சுவையாக இருக்கும்.
*வாழைத்தண்டை கிள்ளிப் பார்த்து நூல் தெரிந்தால் மட்டுமே வாங்க வேண்டும். நார் தெரிந்தால் அது முற்றலாயிருக்கும்.
*ரவையை வறுத்து, பச்சை மிளகாய், தக்காளி, முருங்கைக் கீரையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து தோசை வார்க்க சுவையான ரவா ேதாசை ரெடி.
– ஆர். பூஜா. சென்னை.
*வீட்டில் ரசம் வைத்த பிறகு அதில் அரை ஸ்பூன் சீனி கலந்தால் ரசம் சுவையாக இருக்கும்.
*ரவையை வறுக்கும் பொழுது உப்புத் தூள் கலந்து வறுத்தால் நீண்ட நாட்கள் புழுக்கள் அண்டாது.
*வெண்டைக்காய்களை ஒரு இன்ச் அளவு வெட்டி கோபி மஞ்சூரியன் மசாலாப் பவுடரை உபயோகித்து வெண்டைக்காய் மஞ்சூரியன் செய்யலாம். ருசி அசத்தும்.
– இந்திராணி தங்கவேல், சென்னை.
பீட்ரூட் பணியாரம்
தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி, ஜவ்வரிசி – தலா ½ கப், பீட்ரூட் – 200 கிராம், சர்க்கரை – 100 கிராம், தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – நான்கு,
எண்ணெய் – 300 கிராம், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பீட்ரூட்டை தோல் நீக்கி, துருவி வைக்கவும். ஏலக்காயை பொடியாக்கவும். பச்சரிசி, புழுங்கல் அரிசியை ஒன்று சேர்த்து ஊறவைக்கவும். ஜவ்வரிசியை தனியாக ஊறவைக்கவும். ஊறிய அரிசியை சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும். மசிந்தவுடன் ஜவ்வரிசியை கரைத்து ஊற்றி அரைக்கவும். கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து சுற்றி இட்லி மாவு பதத்தில் அரைத்தெடுக்கவும்.
துருவிய பீட்ரூட்டை நன்கு வேகவைத்து அத்துடன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து கிளறி, சுருண்டு வரும் போது இறக்கவும். குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவை சிறிதளவு ஊற்றி, அதன் மீது பீட்ரூட் கலவை ஒரு தேக்கரண்டி போட்டு, மீண்டும் அதன் மீது மாவு ஊற்றி, வேகவைத்து திருப்பிப் போட்டு, வேக வைத்து எடுக்கவும். சத்தும், சுவையும் நிறைந்த பணியாரம் தயார்.
– எஸ்.உஷாராணி, கோவை.
The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.