கிச்சன் டிப்ஸ்

* தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிதுநேரம் ஃப்ரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
* ஆப்பத்துக்கு தயார் செய்யும்போது தேங்காய்ப் பாலுடன் இளநீர் கலந்தால் தேங்காய்ப்பால் இரட்டிப்பு சுவையுடன் இருக்கும்.
* கீரையை வேக விடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக, ருசியாக இருக்கும்.
* பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, எலுமிச்சைச் சாறு கலந்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
* பாலைக் காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தில் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.
* பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும்போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
* தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரைத் தெளித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வைத்தால் கசப்பு இருக்காது.
* புளியமரப் பூ கிடைத்தால், சிறிதளவு எடுத்து உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப் பூ சட்னி தயார். மிகவும் சுவையாக இருக்கும்.
* துவையல் அரைக்கும்போது மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது மிளகு.
* காய்கறிகளை நறுக்கிய உடனேயே அவற்றை சமைக்க வேண்டும். அப்படி சமைக்காமல், வெகுநேரம் வைத்திருந்தால், காற்று பட்டு, அவற்றில் உள்ள அனைத்து சத்துக்களும் போய்விடும். சத்துகள் போன காய்கறிகளைஉண்பதால் எந்த பலனும் இல்லை. எனவே, நறுக்கிய உடனே சமைத்துவிட வேண்டும்.
* காய்கறிகள் வாடிவிட்டால் கவலை வேண்டாம். ஃப்ரிட்ஜிலிருந்து ஜில்லென்ற தண்ணீரை எடுத்து, அதில் சில துளிகள் எலுமிச்சைச் சாறுவிட்டு அதில் சிறிது நேரம் போட்டுவைத்து எடுத்தால், ஃப்ரெஷ்ஷாகிவிடும். – கவிதா பாலாஜிகணேஷ்.
* வறுபயறு செய்ய முளைக்கட்டிய பருப்புகளை நிழலில் உலர்த்தி, பின் மைக்ரோ அவனில் வைத்து எடுக்க, நன்றாகப் பொரிந்திருக்கும்.
* முந்திரி, பாதாம் போன்றவற்றைச் சீவும்போது, ஈரத்துணியில் சுற்றி வைத்துவிட்டு பின் சீவ மெல்லியதாக ஒரே மாதிரியாக வரும்.
* சமையலில் ஃபுட் கலர் சேர்க்கும்போது தண்ணீரில் கரைத்துச் சேர்த்தால் ஒரே மாதிரியாக கலர் பரவும்.
* அதிக எண்ணெய் குடிக்கும் வெல்லம் சேர்த்து பலகாரங்கள் செய்யும்போது சுக்கை சேர்த்து செய்தால் அஜீரணம் ஏற்படாது.
* அப்பத்தில் வெல்லம் அதிகமாகிவிட்டால் அப்பம் ஒட்டிக்கொண்டு எடுக்க வராது. எடுத்தாலும் வடிவத்துடன் வராது. அதை சரிசெய்ய, அப்ப மாவில் ஒரு கரண்டி எடுத்து அதில் தண்ணீர்விட்டு கூழ் போல தனியாகக் காய்ச்சி அதை மாவில் சேர்த்தால் நன்றாக வரும்.
– இந்திராணி தங்கவேல்.
* வெண்ணெய்க் கட்டி மீது ஒரு தேக்கரண்டி சர்க்கரையைத் தூவி வைத்தால் உலராமல் இருக்கும்.
* சின்ன வெங்காயத்தை வாங்கியதும் வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்தால், ஒரு மாதம் வரை கெடாமல், முளை வராமல் இருக்கும்.
* வடாம் பிழிய அரிசி மாவில் கூழ் செய்யும்போது, பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி அச்சில் பிழிவார்கள். அப்படிக் கூழ் செய்யும்போது, மாவுடன் 2 தேக்கரண்டி கசகசா சேர்த்துக் கிளறி கூழ் தயாரிக்கவும். வடாம் பொரிக்கும்போது கமகம வாசனையோடு இருக்கும். சுவையும் நன்றாக இருக்கும்.
* வெஜிடேரியனில் என்ன சூப் வைத்தாலும், அதில் அரை தேக்கரண்டி இஞ்சிச் சாற்றைச் சேர்க்கவும். எந்த சூப்பாக இருந்தாலும் சுவையில் ஸ்பெஷல் சூப் ஆகிவிடும்.
* புளிக்குழம்பு வைக்கும்போது மசாலாவை நல்லெண்ணெயில் வதக்கி, நறுக்கிய காய்கறிகளைப் போட்டபின் புளிக்கரைசலை ஊற்றி உப்பும், தண்ணீரும் சேர்த்தால் குழம்பு ருசியாக இருக்கும்.
* வீட்டிலேயே இட்லி, தோசைப்பொடி அரைக்கும்போது, ஒரு தேக்கரண்டி சீரகத்தை வறுத்து, பருப்பு மற்றும் மிளகாயுடன் சேர்த்து அரைக்க வேண்டும். இந்தப் பொடி வாசனையாக இருப்பதுடன் எளிதில் செரிமானமும் ஆகும்.
– இரா. அமிர்தவர்ஷினி.

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: