கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி தீவிரம்..!!

பெங்களூரு: கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் சதீஷ் முஜகொண்டா (30) இவரது மனைவி பூஜா (26) இவர்களுக்கு 2 வயது குழந்தை உள்ளது. இவர்களுக்கு 4 ஏக்கரில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பயிரிடுவதற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் சதீஷ் முஜகொண்டாவின் தந்தை சங்கரப்பா விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளார். 30அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதால்அவர் அதை மூடாமல் இருந்துள்ளார். இதற்கிடையே நேற்று மாலை 6 மணி அளவில் சதீஷ் முஜகொண்டாவின் 2 வயது குழந்தை சாத்விக் 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

இதனை கண்ட பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கினர். மேலும் ஆழ்துளை கிணற்றுக்குள் கேமிராக்களை விட்டு குழந்தையின் அசைவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சுமார் 15 முதல் 20 அடி ஆழத்தில் குழந்தை சிக்கிய நிலையில் 5 அடிக்கு மேல் பாறைகள் இருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகளை மாவட்ட கலெக்டர் பூபாலன், போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் சோனவன் மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும் ஜே.சி.பி மூலம் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வரும் நிலையில், ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையின் அசைவுகளை மீட்பு குழுவினர் உறுதி செய்து தகவல் தெரிவித்தனர்.

The post கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: