அதைத்தொடர்ந்து ஜனவரி மாதம் 19ம் தேதி நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவிலும் மோடி பங்கேற்றார். பின்னர் ராமேஸ்வரம் சென்றவர் வழிபாடுகளிலும் ஈடுபட்டார். பின்னர் பிப்ரவரி 27ம் தேதி தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி பல்லடத்தில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். குலசேகர பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கடந்த 4ம் தேதி சென்னை நந்தனத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்தநிலையில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி நாளை (15ம் தேதி) வெள்ளிக்கிழமை தமிழ்நாடு வர இருக்கிறார். அவர் கடந்த 3 மாதங்களில் 5வது முறையாக தமிழ்நாடு வருகை தர இருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் காலை 11 மணிக்கு நடைபெறுகின்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறுகின்ற இடத்திற்கு வந்தடைகிறார். இந்தநிலையில் நாளை அவர் கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். மார்ச் 19ம் தேதி பாலக்காட்டில் நடைபெறுகின்ற ரோடு ஷோவிலும் பங்கேற்று பேச உள்ளார். மேலும் தமிழ்நாட்டில் மார்ச் 18ம் தேதி சேலத்திலும், 19ம் தேதி கோவையிலும் நடைபெறுகின்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.
அதற்கேற்ப அவரது பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாஜ கூட்டணி இன்று வரை இறுதி செய்யப்படவில்லை. இதனால் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் 10 வது முறையாக களமிறக்கப்படுவாரா? அல்லது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்துள்ள விஜயதரணிக்கு சீட் வழங்கப்படுமா? அல்லது வேறு யாராவது புதுமுக வேட்பாளர் நிறுத்தப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் மோடி பிரசாரம் செய்யும்போது வேட்பாளர் அறிமுகம் நடைபெறுமா அதற்கேற்ப பாஜவின் மூன்றாவது பட்டியல் இன்று மாலைக்குள் அல்லது நாளை காலைக்குள் வெளியானால் மட்டுமே பாஜ வேட்பாளரை ஆதரித்து பிரதமர் பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பிரதமர் வருகையையொட்டி மேடை அமைக்கும் பணிகள் அகஸ்தீஸ்வரம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. மாலையில் ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
The post கன்னியாகுமரி தொகுதி வேட்பாளரை பிரதமர் மோடி அறிமுகம் செய்வாரா? பாஜக பொதுக்கூட்டத்தில் நாளை பேசுகிறார் appeared first on Dinakaran.