கனிராவுத்தர் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்-குளத்தை பாதுகாக்க கோரிக்கை

ஈரோடு : ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் நேற்று காலை மீன்கள் செத்து மிதந்தன. எனவே, குளத்தை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி 4வது மண்டலத்துக்கு உட்பட்டது கனிராவுத்தர் குளம். ஈரோடு, சத்தி ரோட்டில், சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குளம் பல்வேறு பொது நல அமைப்புகளால் தூர் வாரப்பட்டு பரமாரிப்பு செய்யப்பட்டு, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இந்தக் குளம் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை குளத்தின் கரையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் பலரும் நடைப்பயிற்சி செய்தனர். அப்போது, குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்தது தெரியவந்தது.இதுகுறித்து அங்கிருந்த சிலர் கூறுகையில்,“நேற்று இந்தக் குளத்தில் சிலர் நிறைய மீன்களை பிடித்து சென்றனர்.

இன்று காலை அதே இடத்தில் தற்போது மீன்கள் செத்து மிதக்கின்றன. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த குளத்தை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.திடீரென குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது அப்பகுதி மக்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

The post கனிராவுத்தர் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்-குளத்தை பாதுகாக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: