காஞ்சிபுரத்தில் அதிகபட்சம் 66.40 மிமீ மழை பதிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 66.40 மிமீ மழை அளவு பதிவாகியுள்ளது.காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து வாட்டி வதைப்பதும், மாலை நேரத்தில் குளிர்ச்சியான காற்று வீசுவது என மாறி மாறி இருந்தது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். வழக்கம்போல, நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மாலை 5 மணியளவில் வானிலை அப்படியே தலைகீழாக மாற்றம் அடைந்து மழை கொட்டியது.

இதில் காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, மாவட்ட கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம், ஒலிமுகமதுபேட்டை, பாலுச்செட்டிசத்திரம், தாமல், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, திம்மசமுத்திரம், புஞ்சை அரசன்தாங்கல், அய்யங்கார்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் காஞ்சிபுரம் உளகளந்த பெருமாள் கோயில் எதிரில் கழிவுநீர் கால்வாய் மேனுவலில் இருந்து மழைநீர் கலந்து வெளியேறி அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.

மேலும், மேட்டுத்தெரு, கீரை மண்டபம், கங்கைகொண்டான் மண்டபம் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post காஞ்சிபுரத்தில் அதிகபட்சம் 66.40 மிமீ மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: