12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்க : கமல்ஹாசன் வேண்டுகோள்!!

சென்னை : 12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் 12 மணிநேர வேலைக்கு வகை செய்யும் தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் கடந்த 21ம் தேதி கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோன்று தொழிற்சங்கங்களும் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து நேற்று மாலை 3 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து ‘தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் தொழிற்சாலைகள் திருத்த சட்டமுன்வடிவு மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக’’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு கமல்ஹாசன் வரவேற்பு அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனும் தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu
அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறேன். யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுத் தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படுவது ஓர் ஆரோக்கியமான அரசின் அடையாளங்கள். திரு @mkstalin அவர்களைப் பாராட்டுகிறேன். 12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

The post 12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்க : கமல்ஹாசன் வேண்டுகோள்!! appeared first on Dinakaran.

Related Stories: