ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருப்போரூர் தொழிற்சாலை விரிவாக்க திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

சென்னை: ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் டைசல் நிறுவனத்துடன் திருப்போரூர் தொழிற்சாலை விரிவாக்க திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 25ம் தேதி இரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இதில் 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்களும் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டை சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர்பேக் இன்ப்ளேடர் தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செய்யப்பட்டது. ஒப்பந்தத்தில் டைசல் நிறுவனத்தின் வணிக இயக்கப் பிரிவு தலைவர் கென் பாண்டோ, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு ஆகியோர் கையொப்பமிட்டனர். இந்த நிகழ்வின்போது, டைசல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிஹிரோ அவோகி உடனிருந்தார்.

பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் பேசியதாவது: ஜப்பான் மற்றும் இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை திட்டத்தின்கீழ் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் – ஜப்பான் வணிக மற்றும் தொழில் பேரவை ஆகிய நிறுவன ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனகாவா, ஹிரோஷி மாகாணங்களுடன் பொருளாதார புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஜப்பானிய நாட்டின் மிகப் பெரும் வங்கிகளான, பேங்க் ஆப் டோக்கியோ உள்ளிட்ட மூன்று வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே இதுவரை 5,596 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4244 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 5 ஜப்பானிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், டைசல் கார்ப்பரேஷன், மிட்சுபிஷி, மதர்சன் ஆட்டோ சொல்யூஷன்ஸ், ரெனோ-நிஸ்ஸான் விரவாக்கத் திட்டம் மற்றும் மக்கினோ போன்ற பல நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை நிறுவவதற்காக, சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.
நிதிநுட்பக்கொள்கை, ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை, உயிர் அறிவியல் கொள்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை, விண்வெளி மற்றும் பாதுகாப்புக்கொள்கை, காலணி மற்றும் தோல்பொருட்கள் கொள்கை மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான ஒரு சிறப்பு ஊக்குவிப்புத் திட்டம் என்று பல கொள்கைகளை வெளியிட்டு இருக்கிறோம். சிங்கிள் விண்டோ போர்டல் 2.0 மற்றும் டி.என்.எஸ்.டபிள்யூ.பி ஆப் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

இதன் பொருட்டே, முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக, தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. மேலும், ஜப்பானிய நிறுவனங்கள் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த துறைகளில் மட்டுமே முதலீடு மேற்கொள்ள விழைகின்றன. இந்நிலையை சற்றே விரிவுபடுத்தி, மேம்பாட்டு திட்டங்களிலும் முதலீடு மேற்கொள்ள வருமாறு, இத்தருணத்தில் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். மருத்துவ சாதனங்கள் பூங்கா, உணவுப் பூங்காக்கள், மின் வாகனங்களுக்கான பூங்கா மற்றும் வருங்கால நகர் திறன் பூங்கா, மின்னணுவியல் உற்பத்தித் தொகுப்புகள், ஒருங்கிணைந்த ஆடை மற்றும் ஜவுளி பூங்கா, தோல் காலணிகள் மற்றும் உப பொருட்களின் உற்பத்தித் தொகுப்புகள் மற்றும் நிதிநுட்ப நகரம் என்று பல்வேறு துறை சார்ந்த உட்கட்டமைப்புகளை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம். இத்துறைகளில், உங்களின் மேலான முதலீடுகளை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்வில், ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜி மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார். நிகழ்வில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, துறையின் செயலாளர் கிருஷ்ணன், தொழில் வணிக ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு, ஒசாகாவிற்கான இந்திய தூதர் நிகிலேஷ் கிரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருப்போரூர் தொழிற்சாலை விரிவாக்க திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து appeared first on Dinakaran.

Related Stories: