உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை

வேலூர்: வேலூரில் உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளான திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்களுடன் கடந்த சில வாரங்களாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ள சிவக்குமார் பேசுவதாக ஒருவர் போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். அப்போது உள்ளாட்சி பிரதிநிதிகளிடம், ‘உங்களை பற்றி நிறைய புகார்கள் வந்துள்ளது. நீங்கள் சென்னையில் நேரில் வந்து என்னை சந்திக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். எதற்காக வர வேண்டும் என கேள்வி கேட்டவர்களை, ‘உங்களால் வர முடியுமா? முடியாதா? விளைவுகள் வேற மாதிரி இருக்கும்’ என ஐஏஎஸ் அதிகாரியாக பேசியவர் மிரட்டி உள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். மேலும் பேசிய நபர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். அப்போது மிரட்டல் விடுத்தவரின் செல்போன் ட்ரூ காலில் அவர் சிவக்குமார் ஐஏஎஸ், இணை செயலாளர், தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது சிவக்குமார் என முதல்வரின் தனிப்பிரிவில் ஐஏஎஸ் அதிகாரி யாரும் இல்லை என தெரியவந்தது. இதற்கிடையில் கணியம்பாடி திமுக ஒன்றிய குழு துணைத்தலைவர் கஜேந்திரனையும் (61) கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போனில் அழைத்த நபர், இதேபோல சென்னையில் இருந்து சிவக்குமார் ஐஏஎஸ் பேசுவதாகவும், உங்கள் மீது அதிகமான புகார் வந்துள்ளது, அதுபற்றி விசாரிக்க சென்னை புறப்பட்டு வரும்படியும் மிரட்டினாராம்.

இதுகுறித்து அவர் வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணையில் இறங்கினர். மிரட்டல் வந்த செல்போனை போலீசார் டிராக் செய்தபோது அந்த நபர் சென்னை விருகம்பாக்கத்தில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து எஸ்பி தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் ஐஏஎஸ் அதிகாரி என கூறி போலியான பெயரில் மிரட்டிய சுபாஷ்(29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சென்னையில் இருந்து நேற்று காலை வேலூருக்கு அழைத்து சென்றனர்.

இவர் யார் யாருக்கு போன் செய்து மிரட்டினார்? யாரிடமாவது மிரட்டி பணம் பறித்தாரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. காவலில் எடுத்து விசாரிக்க முடிவு: கைது செய்யப்பட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி சுபாஷை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே சென்னை, திருவண்ணாமலை உட்பட பல்வேறு இடங்களில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிய வந்துள்ளதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரிக்கு சிறை appeared first on Dinakaran.

Related Stories: