ஈஷா இல்லாவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது: காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விவசாய சங்க தலைவர் செல்லமுத்து புகழாரம்

திருப்பூர்: “ஈஷா என்ற ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் தோன்றி இருக்காவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது” என 3,000 விவசாயிகள் பங்கேற்ற காவேரி கூக்குரல் கருத்தரங்கில் தமிழக விவசாய சங்க தலைவர் கு. செல்லமுத்து கூறினார்.

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தனம் – சாமானியர்களுக்கும் சாத்தியம்’ என்ற மர விவசாய் கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (அக்.15) நடைபெற்றது. முன்னோடி விவசாயி துரைசாமி அவர்களின் 50 ஏக்கர் சந்தன பண்ணையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 3,000 விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.

தொடக்க விழா நிகழ்வில் தமிழக விவசாய சங்க தலைவர் கு. செல்லமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் அவர் பேசுகையில், “விவசாயிகளின் மனதில் மரம் நடும் எண்ணத்தை ஈஷா விதைத்து இருக்கிறது. ஈஷா என்ற ஒரு அமைப்பு இல்லாவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களின் விவசாய நிலங்களில் மரம் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. இது மிகவும் பாராட்டுக்குரியது.

இந்த நிகழ்ச்சி நடைபெறும் தோட்டத்தின் உரிமையாளர் துரைசாமி சந்தன மரங்களை நட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் அவர் பெரும் கோடீஸ்வரர் ஆகிவிடுவார். இன்று நடைபெறும் இக்கருத்தரங்கும் விழிப்புணர்வும் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் தமிழக விவசாயிகள் கடனாளியாக இருக்க வேண்டிய தேவை இருந்து இருக்காது. எனவே, வரும் தலைமுறை விவசாயிகள் எதிர்காலத்தில் கடன் இன்றி, மானம் மரியாதையுடன் கெளரவமாக, பணக்காரர்களாக வாழ வேண்டும் என்றால் காவேரி கூக்குரல் சொல்லும் மரம் நடும் வழிமுறைகளை முழு மனதாக ஏற்று செயலாற்ற வேண்டும்” என்றார்.

வனம் இந்தியா அறக்கட்டளையின் செயலாளர் சுந்தரராஜன் பேசுகையில், “ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கமும் வனம் இந்தியா அமைப்பும் பூமி தாயின் பசுமை போர்வையை அதிகரிக்கும் ஒரே நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது” என கூறினார். காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் பேசுகையில், “உலகிலேயே மிக விலை உயர்ந்த மரம் சந்தன மரம் தான்.

இம்மரத்தை வளர்ப்பதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மரத்தில் இருந்து மட்டும் குறைந்தப்பட்சம் ரூ.2 லட்சமும், 25 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலும் விவசாயிகள் சம்பாதிக்க முடியும். சந்தன மரத்தை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்க முடியும். இம்மரம் உப்பு தண்ணீரிலும் கூட வளரும் சாத்தியம் உள்ளது.

இம்மரத்திற்கு இவ்வளவு சிறப்புகள் இருந்தும் திருட்டு பயம் காரணமாக இதை வளர்க்க தயங்குகின்றனர். ஆனால், தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் மைக்ரோ சிப், சென்சார் மற்றும் ரேடார் தொழில்நுட்பம் என பல்வேறு விதமான தொழில்நுட்ப கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இன்னும் பல கருவிகள் வந்துவிடும். எனவே, சந்தன மரத்தை பயமின்றி நடவு செய்யலாம்.

இந்திய சந்தனத்திற்கு உலகளவில் பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. 1950-ம் ஆண்டுகளில் சுமார் 4,000 டன் வரை சந்தனத்தை நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டினோம். ஆனால், தற்போது நம்முடைய உள்நாட்டு தேவைக்கு கூட வெளிநாடுகளில் இருந்து சந்தனத்தை இறக்குமதி செய்து வருகிறோம். எனவே சந்தன மரத்திற்கான தேவை நம்மிடம் அதிகம் இருக்கிறது. அதை பூர்த்தி செய்வதற்கு உள்நாட்டில் விவசாயிகள் அதிகளவில் சந்தன மரங்களை வளர்க்க வேண்டும்.

சந்தன மரத்தை வெட்டி விற்பனை செய்வதில் உள்ள சட்ட சிக்கல்களும் படி படியாக நீங்கி வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் கூட வன சட்டங்கள் எதுவும் விவசாய நிலங்களுக்கு பொருந்தாது என கூறியுள்ளது. இதன்மூலம், விவசாயிகள் தாங்கள் விரும்பும் எந்த வகையான மரத்தையும் தங்கள் நிலங்களில் வளர்த்து விற்க முடியும். எனவே, விவசாயிகள் கோடீஸ்வரர்களாக ஆக மாறுவதற்கு சந்தன மரம் வளர்ப்பது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்” என்றார்.

இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து மரம் சார்ந்த விவசாய விஞ்ஞானிகளும், முன்னோடி மர விவசாயிகளும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

குறிப்பாக, பெங்களூரு IWST நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி டாக்டர் சுந்தரராஜ் சந்தன மரத்தை நடவு முதல் விற்பனை செய்வது வரை உள்ள அனைத்து முக்கிய அம்சங்கள் குறித்தும் விரிவாக பேசினார். கேரளாவைச் சேர்ந்த வன அதிகாரி திரு. வினோத் குமார் ‘சந்தனத்தின் உலகளாவிய தேவை’ என்ற தலைப்பிலும், காரைக்குடி விவசாயி திரு. ராமன் அவர்கள் ‘மானாவாரி நிலத்தில் செம்மர வளர்ப்பு’ என்ற தலைப்பிலும் பேசினர்.

இதுதவிர, முன்னோடி சந்தன மர விவசாயிகள் டாக்டர். கவிதா மிஸ்ரா (கர்நாடகா), இஸ்தரப்பு ரெட்டி (தெலுங்கானா), ரமேஷ் பலூடகி (கர்நாடகா), நிலத்தின் உரிமையாளரும் முன்னோடி சந்தன மர விவசாயியுமான துரைசாமி உள்ளிட்டோர் தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டனர்.

The post ஈஷா இல்லாவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது: காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விவசாய சங்க தலைவர் செல்லமுத்து புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: