கடந்த 2 ஆண்டுகளில் முதலீடுகள் அதிகரிப்பு பொருளாதாரத்தில் தமிழ்நாட்டுக்கு 2வது இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: இந்திய அளவில், 2வது பெரிய பொருளாதாரமாக பல்வேறு தரவரிசைகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது புதிய மற்றும் விரிவாக்க திட்டத்திற்கான முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ளன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சரக்கு போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில் உலகளவில் முன்னிலையில் உள்ளது யுபிஎஸ் நிறுவனம். இந்தியாவில் முதலாவதாக சென்னை போரூரில் 400க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைத்துள்ள தொழில்நுட்ப மையத்தை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் அமைக்கிறது.

இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பேசியதாவது: யுனைடெட் பார்சல் சர்வீசஸ் நிறுவனம் உலக அளவில் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகவும், சரக்கு போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில் உலகளவில் முன்னணியில் உள்ள நிறுவனமாகவும் திகழ்கிறது. இந்நிறுவனம், சென்னை போரூரில் தொழில்நுட்ப மையத்தை திறப்பது தமிழ்நாட்டுக்கும், எங்கள் ஆட்சிக்கும், எனக்கும் பெருமை தருகிறது.
இந்திய அளவில், 2வது பெரிய பொருளாதாரமாக பல்வேறு தரவரிசைகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது புதிய மற்றும் விரிவாக்க திட்டத்திற்கான முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ளன. முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்களை அமைத்து வருகிறோம். வளர்ந்து வரும் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், துறை சார்ந்த கொள்கை வெளியீடுகளை வெளியிட்டு வருகிறோம்.
அந்த வகையில், மாநிலத்தில் ஒருங்கிணைந்த, நம்பகமான, செலவு குறைந்த மற்றும் நிலைக்கத்தக்க சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவதற்காகவும் திட்டங்களை தீட்டினோம்.

தமிழ்நாடு சரக்கு போக்குவரத்து கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து திட்டம், 2023 கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. சரக்கு போக்குவரத்து துறைக்கென சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு கிராமத்தில் பல்முனைய போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது. தொழிற்சாலைகள் நிறைந்த கோயம்புத்தூர் மாவட்டத்திலும் ஒரு பல்முனைய சரக்கு போக்குவரத்துப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மூன்று புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான தசோ சிஸ்டம்ஸ் உடன் இணைந்து, தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையமும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சீமென்ஸ் உடன் இணைந்து, தமிழ்நாடு திறன்மிகு மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையமும், அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஜி.இ.ஏவியேஷன் உடன் இணைந்து தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையமும் அமைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் வெளியிடப்பட்ட குஷ்மேன் மற்றும் வேக்ஃபீல்ட் அறிக்கையின்படி, பொறியியல் பட்டதாரிகளின் இருப்பு, வணிகம் புரிவதற்கும், வாழ்வதற்கும் நிலவும் எளிதான சூழல் மற்றும் நல்ல நிர்வாகம் போன்ற காரணிகளால், இந்தியாவிலேயே ஜிசிசி-க்களுக்கான முதல் 2ம் அடுக்கு நகரமாக கோயம்புத்தூர் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், சரக்கு போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில், உலகளாவிய முன்னணி நிறுவனமான யுபிஎஸ், சென்னை போரூரில் 400-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு, குறிப்பாக, கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து பணியமர்த்தும் திட்டத்துடன் அமைத்துள்ள இந்த தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 2011-12 நிதியாண்டு முதல் கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்ற இறக்கங்களுடன் 5.80 சதவீதமாக இருந்தது.

தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி, நிலையான விலைகளின் அடிப்படையில், 2022-23ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 14 லட்சத்து 53 ஆயிரத்து 321 கோடி ரூபாயாகும். வளர்ச்சி விகிதத்தில் இது 8.19 விழுக்காடாகும். 2021-22-ஆம் ஆண்டில், நடப்பு விலைகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. 2021-22 மற்றும் 2022-23ல் அகில இந்திய அளவிலான பணவீக்கம் 9.31 சதவீதம் மற்றும் 8.82 சதவீதமாக இருந்த நிலையில், தமிழ்நாட்டின் பணவீக்கக் குறியீடு 2021-22-ல் 7.92 சதவீதமாகவும், 2022-23ல் 5.97 சதவீதமாகவும் குறைந்துள்ளது என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது புள்ளிவிவரம் மட்டுமல்ல; இந்த ஆட்சிக்கு கிடைத்த நற்சாட்சி பத்திரம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு, யுபிஎஸ் நிறுவனத்தின் தமிழ்நாட்டிற்கான சர்வதேச தலைமை அலுவலர் பால சுப்ரமணியன், மனிதவள தலைமை அலுவலர் டேரல் போர்டு, இந்தியாவிற்கான துணை தலைவர் சுப்ரமணி ராமகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. இது புள்ளிவிவரம் மட்டுமல்ல; இந்த ஆட்சிக்கு கிடைத்த நற்சாட்சி பத்திரம்.

The post கடந்த 2 ஆண்டுகளில் முதலீடுகள் அதிகரிப்பு பொருளாதாரத்தில் தமிழ்நாட்டுக்கு 2வது இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: