இயற்கை பேரிடரின் போது மக்கள் கண்ணீருக்கு ஆறுதல் கூற வராத மோடி தேர்தலுக்காக தொடர்ந்து தமிழகம் வருவது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேசிய காங்கிரஸ் தலைவர்களை தமிழகத்தில் பிரசார களத்தில் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி மற்றும் மூத்த தலைவர்களின் தமிழகம் வருகை குறித்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராகுல்காந்தி, முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து 2 இடங்களில் மாபெரும் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க இருப்பதாகவும், கார்கே மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் ஓரிரு இடங்களில் பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் வரும் 12ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 12ம்தேதி காலை திருநெல்வேோலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். அப்போது, காங்கிரஸ் வேட்பாளர்கள் விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். அதைதொடர்நது மாலையில் கோவையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதற்கான சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
The post இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாட்டில் வரும் 12ம் தேதி ராகுல்காந்தி பிரசார சுற்றுப்பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து கோவையில் பேசுகிறார் appeared first on Dinakaran.
