நிலவை நெருங்கும் சந்திரயான் – 3 : இறுதிக் கட்டமாக சுற்றுவட்டப்பாதையின் உயரம் 153*163 கிலோ மீட்டராக குறைப்பு!!

பெங்களூரு : நிலவின் நீள்வட்ட பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப் பாதை தொலைவு 4வது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது. விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் பணி நாளை நடைபெற உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 17வது நிமிடத்தில் சந்திரயான் 3 செயற்கோள் புவி வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து செயற்கை கோளின் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சந்திரயான் விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணத்தில் ஒவ்வொரு கட்டமாக புவி சுற்று வட்ட பாதையில் விண்கலத்தை உயர்த்தும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி நள்ளிரவு 12.15 மணியளவில் புவியின் இறுதி சுற்று வட்டப்பதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. கடந்த 5ம் தேதிகடைசி கட்டமாக லூனார் ஆர்பிட் எனப்படும் நிலவின் சுற்று வட்டபாதைக்குள் சந்திராயன் 3 நுழைந்தது. கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது.

அடுத்ததாக, ஆகஸ்ட் 9ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக நிக ழ்த்தியது. அதன், என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 174 கிமீ x 1437 கிமீ. கொண்டு வரப்பட்டது.ஆகஸ்ட் 14ம் தேதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதையின் உயரம் 150 கிமீ x 177 கிமீ ஆக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நிலவின் நீள்வட்ட பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப் பாதை தொலைவு 4வது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது விண்கலம் நிலவிற்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 153கிமீ தொலைவிலும் அதிகபட்சம் 163 கிமீ தொலைவிலான சுற்றுப் பாதையிலும் பயணித்து வருகிறது. சுற்றுவட்டப் பாதையின் தொலைவு குறைக்கும் பணி இத்துடன் நிறைவுபெறுவதாகவும் விண்கலத்தில் இருந்து லேண்டரை பிரிக்கும் பணி நாளை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதையடுத்து லேண்டரை சந்திரனில் தரையிறக்க சரியான பாதையில் பயணிக்க வைக்கப்படும். ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 5.47 மணி அளவில் விக்ரம் லேண்டரை நிலவில் மேற்பரப்பில் மெதுவாக தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

The post நிலவை நெருங்கும் சந்திரயான் – 3 : இறுதிக் கட்டமாக சுற்றுவட்டப்பாதையின் உயரம் 153*163 கிலோ மீட்டராக குறைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: