இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என அடையாளப்படுத்தக் கூடாது: தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து

டெல்லி: பெங்களூரில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியை மினி பாகிஸ்தான் என்றும், பெண் வழக்கறிஞரிடம் அநாகரீக கருத்துகளை கூறிய விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வழக்கு விசாரணையை நேரலையாக ஒளிபரப்புவது, நீதிமன்றத்தைத் தாண்டியும் மக்களிடம் சேரும் என்பதை வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நீதிமன்றத்தில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீதிபதி ஸ்ரீஷானந்தா தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இதனால், அவருக்கு நோட்டீஸ் அனுப்புவதை தவிர்த்துவிட்டோம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.

“இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என அடையாளப்படுத்தக் கூடாது, அப்படி அழைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அது தேசத்தின் ஒற்றுமைக்கு எதிரானது. பாலினம் சார்ந்த கருத்துகளை ஒரு சாதாரண கண்ணோட்டத்தில் வெளியிடும்போது அது சமூகத்தில் ஆணாதிக்க, பெண் வெறுப்புக் கருத்தாக பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளது எனவே, அதில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணிப்பதில் சமூக ஊடகங்கள் அதிக பங்கு வகிக்கும் பட்சத்தில் நீதிபதிகளின் கருத்துக்கள் நீதிமன்றத்தின் மாண்புடன் ஒத்துப்போக வேண்டியது அவசியம். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியின் சர்ச்சை கருத்து விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா மன்னிப்பு கோரியதை குறிப்பிட்டு அவருக்கு எதிரான விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முடித்து வைத்தது.

The post இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என அடையாளப்படுத்தக் கூடாது: தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: