கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு செப்டம்பரில் சென்னையில் பயணிகள் விமானங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து சமீப காலமாக விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 3,129 சர்வதேச விமானங்கள், 8,962 உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 104 சர்வதேச விமானங்களும், 299 உள்நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மொத்தம் 17.6 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். அதில் சர்வதேச பயணிகள் 5.02 லட்சம். உள்நாட்டு பயணிகள் 12.58 லட்சமாகும்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முழுவதும் சென்னை விமான நிலையத்தில் இயக்கப்பட்ட மொத்த விமானங்கள் 10,873. அதில் சர்வதேச விமானங்கள் 2,704. உள்நாட்டு விமானங்கள் 8,169. நாளொன்றுக்கு சராசரியாக 90 சர்வதேச விமானங்களும், 272 உள்நாட்டு விமானங்களும் என மொத்தம் 362 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல பயணிகளின் எண்ணிக்கை 15.1 லட்சம். அதில் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 4.6 லட்சம், உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 10.5 லட்சமாகும். கடந்தாண்டுடன் இந்தாண்டு ஒப்பிடுகையில் 1,218 விமானங்கள் அதிகரித்துள்ளன.

அதேபோல பயணிகளின் எண்ணிக்கையும் 1.8 லட்சம் அதிகரித்துள்ளது. அகில இந்திய அளவில் ஒப்பிடுகையில் சென்னை விமான நிலையத்தில், விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை வியக்க தகுந்த அளவில் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக சுற்றுலா பயணிகள், தொழில், வர்த்தக துறையினர் அதிகரித்து வருவதால், இந்த சாதனையை சென்னை விமான நிலையம் படைத்துள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

The post கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு செப்டம்பரில் சென்னையில் பயணிகள் விமானங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: