லாகூர்: தேசதுரோக சட்டத்தை பயன்படுத்தி என்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க ராணுவம் திட்டமிட்டுள்ளதாக இம்ரான் கான் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த சில நாட்களுக்கு முன் ஊழல் வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இம்ரான் கான் கைது செய்யப்பட்ட போது ராணுவம், போலீஸ் மற்றும் இம்ரான் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால், இம்ரான் கட்சியினர் 40 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று இம்ரான் கான் வெளியிட்ட பதிவில், ‘தற்போது லண்டன் திட்டம் (முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்) வெளியே வந்துள்ளது. நான் சிறைக்குள் இருந்தபோது ஏற்பட்ட வன்முறையை காரணமாக பயன்படுத்தி, அவர்கள் (ஆளுங்கட்சி) நீதிபதியாக மாறியுள்ளனர். எனது மனைவி புஷ்ரா பேகத்தை சிறையில் அடைத்து என்னை அவமானப்படுத்துவதும், தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு என்னை சிறையில் அடைப்பதும்தான் அவர்களின் (ராணுவம்) திட்டமாக உள்ளது. வேண்டுமென்றே எங்களது கட்சியினர் மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
அதேபோல் சாதாரண குடிமக்கள் மீது தாக்குதல் மற்றும் ஊடகங்கள் மீதும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். நாளை என்னைக் கைது செய்ய வரும்போது, மக்கள் வெளியே வரமாட்டார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாகிஸ்தான் மக்களுக்கு எனது செய்தி என்னவென்றால், எனது கடைசி துளி ரத்தம் வரை நாட்டிற்காக தொடர்ந்து போராடுவேன், அடிமையாக இருப்பதை விட மரணம் எனக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது’ என்று தெரிவித்துள்ளார்.
The post தேசதுரோக சட்டத்தை பயன்படுத்தி என்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க திட்டம்: ராணுவம் மீது இம்ரான் கான் பகீர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.