ஐசிசி உலக கோப்பை ஒருநாள் தொடர் இந்தியா – பாகிஸ்தான் அக். 14ல் மோதல்: 9 போட்டிகளின் அட்டவணையில் மாற்றம்

புதுடெல்லி: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி உள்பட 9 போட்டிகளுக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை ஒருநாள் தொடர் இந்தியாவில் அக்.5 – நவ.19 வரை நடைபெற உள்ளது. இத்தொடரில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் அக். 15ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், அக். 15ல் நவராத்திரி விழாவின் முதல் நாள் கொண்டாட்டம் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் முழு கவனம் செலுத்துவது சிரமம்.

எனவே, இந்த போட்டியை வேறு நாளில் நடத்த வேண்டும் என அகமதாபாத் காவல் துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்தியா – பாகிஸ்தான் மோதல் உள்பட மொத்தம் 9 போட்டிகளுக்கான அட்டவணையில் மாற்றம் செய்து புதிய அட்டவணையை நேற்று வெளியிட்டது. அதன்படி, இந்தியா – பாக். மோதும் ஆட்டம் ஒருநாள் முன்னதாக அக். 14ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கு தலா 3 போட்டிகளுக்கான தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஐசிசி உலக கோப்பை ஒருநாள் தொடர் இந்தியா – பாகிஸ்தான் அக். 14ல் மோதல்: 9 போட்டிகளின் அட்டவணையில் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: