நம்பிக்கை விதைக்கும் மியூசியம் கஃபே..!!

மெரினா காற்றில் ருசி பார்க்கலாம்

சென்னை மெரினா கடற்கரை எதிரில் உள்ள லேடி வில்லிங்டன் கேம்பஸில் அமைந்துள்ளது மியூசியம் கஃபே. பரந்து விரிந்திருக்கும் இந்த கஃபேவின் அமைதியான சூழலும், கண்ணுக்கு எதிரே தோன்றும் கடற்கரைக் காட்சியும் மனதிற்கு ரம்மியமான சூழலை உருவாக்கி தர, அதை ரசித்தபடியே பரிமாறப்படும் உணவுகளை ருசிக்கலாம் இங்கே.“மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஒரு தொழிற்கல்வியை கற்றுத்தந்து, வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்ற நோக்கத்தில், வித்யாசாகர் பள்ளி மற்றும் காவல் துறை கமிஷனர் அலுவலக நலச்சங்கம், ஆழ்வார்பேட்டையில் இயங்கி வரும் வின்னர்ஸ் பேக்கரி ஆகியவை இணைந்து கடந்த ஜூன் மாதம் தொடங்கியது தான் இந்த மியூசியம் கஃபே. இதன்மூலம், தொழிற்கல்வியுடன் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு, அவர்களை தன்னிச்சையாக இயங்க செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என இந்த உணவகம் தொடங்கப்பட்டதற்கான காரணம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேச தொடங்கினார் மேலாளர் அருண்…‘‘முதல் முயற்சியாக, தற்போது வித்யாசாகர் பள்ளி மாணவர்களான மாற்றுத்திறனாளி பிள்ளைகள் ஐந்து பேருக்கு பயிற்சியளித்து வருகிறோம்.

இந்த பயிற்சியில் பீட்சா, சான்ட்விச், ஜூஸ் வகைகள், மில்க் ஷேக் வகைகள், டோஸ்ட்டிஸ் போன்றவற்றை தயாரிக்கும் முறையும், தயாரித்த உணவுகளை எப்படி வாடிக்கையாளர்களுக்கு பரிமாற வேண்டும், மக்களோடு எப்படி பழக வேண்டும், கஃபேவை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் போன்றவற்றையும் கற்றுத் தருகிறோம். இதன்மூலம், வருங்காலத்தில் ஒரு கஃபேவை அவர்களே தனியாக எடுத்து நடத்தும் அளவுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இந்த பயிற்சியை பெற விரும்பும் மாற்றுத்திறனாளி பிள்ளைகள் அந்த பள்ளியின் நிர்வாகத்தினர் மூலம் வித்யாசாகர் பள்ளியினை தொடர்புகொள்ளலாம். அவர்கள் சில விதிமுறைகள் வைத்திருக்கின்றனர். அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு வரும் பிள்ளைகளை தேர்ந்தெடுத்து எங்களிடம் அனுப்புவார்கள். அவர்களுக்கு நாங்கள் பயிற்சியளிப்போம். இது ஆறுமாத பயிற்சியாகும். பயிற்சிக்காலம் முடிந்ததும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், இந்த பயிற்சிக்காலம் முடியும்வரை அந்த பிள்ளைகளுக்கு வித்யாசாகர் பள்ளி உதவித்தொகையும் வழங்கிவருகிறது.

மியூசியத்தைப் பொருத்தவரை கீழ்த்தளத்தில் இயங்கி வருகிறது. இதனை வித்யாசாகர் பள்ளி நிர்வாகத்தினர் கவனித்து வருகின்றனர். இந்த மியூசியத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நவீன உபகரணங்களும், டெக்னாலஜி குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அறிந்து அவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம்.உதாரணமாக, பார்வையற்ற மாணவராக இருந்தால், அவர் இப்போதுள்ள நவீன எலக்ட்ரானிக் உபகரணங்களை பயன்படுத்தி, எவ்வாறு தங்களது வாழ்க்கை மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற வழிகாட்டுதல் இருக்கும். இதேபோல அவரவர்களுக்கு தேவைப்படும் வழிகாட்டுதல் இருக்கும். மியூசியத்திற்கு தற்போது, நிறையவே மக்கள் வந்து பார்வையிடுகிறார்கள்.அதுபோன்று இந்த கஃபே மூலம் கிடைக்கும் லாபம் எல்லாம் கமிஷனர் அலுவலக நலச்சங்கத்திற்கு போய்ச் சேர்ந்துவிடும். அவர்கள், நலச்சங்கம் மூலம், மாற்றுத்திறனாளிகளின் நலத்திட்டத்திற்கு பயன்படுத்துவார்கள்.

உணவு தயாரிப்புகளை எல்லாம் வின்னர்ஸ் பேக்கரியில் உள்ள பயிற்சி பெற்ற ஆட்கள் பயிற்சியளித்து வருகிறார்கள். இந்த ஆறுமாத பயிற்சி முடித்ததும், அவர்களால் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யவோ அல்லது தன்னிச்சையாக ஒரு கஃபேவை நடத்தவோ முடியும்.கஃபே காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய்க்கிழமை அரைநாள் விடுமுறை. இப்போதைக்கு இங்கே பீட்சா, பர்கர், சான்விட்ச், மில்க் ஷேக் வகைகள், ஜூஸ் வகைகள், டீ, காபி போன்றவை வழங்கி வருகிறோம். பார்ட்டிகள் போன்றவற்றை நடத்தவும் அனுமதிக்கிறோம். ஆனால், இங்கே தயாரிக்கப்படும் உணவுகளை அவர்கள் ஆர்டர் செய்ய வேண்டும்.இங்கே வரும் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் வைக்கும் ஒரேஒரு கோரிக்கை, உணவுக்காக சிறிது நேரம் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்பதுதான்.

ஏனென்றால், வேலை செய்பவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதால், மற்ற கஃபே, ஹோட்டல்கள் போன்று இவர்களால் வேகமாக செயல்பட முடியாது. அதனால்தான் இந்த கோரிக்கை. ஆனால், உணவுகளை தயாரித்துவிட்டு, மகிழ்ச்சியில் அந்த பிள்ளைகள் நம்மை பார்த்து சிரிக்கும்போது, காத்திருக்கும் நேரம் கூட அழகாகவே கடந்து போய்விடும்.இதை அடிப்படையாகக் கொண்டு, வித்யாசாகர் பள்ளியில் தற்போது புதிதாக ஓராண்டு பயிற்சிக் கல்வி ஒன்றும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இந்த பயிற்சிக் கல்வியில், முதல் 6 மாதம் பாடப் பயிற்சியும், மீதமுள்ள 6 மாதம் மியூசியம் கஃபேவில் பிராக்டிக்கல் பயிற்சியும் வழங்கப்படும். இந்த பயிற்சி முடிந்ததும், வித்யாசாகர் பள்ளி மற்றும், வின்னர்ஸ் பேக்கரியும் இணைந்து ஒரு சான்றிதழும், அரசு சார்பில் ஒரு சான்றிதழும் வழங்கப் படும். இது அவர்களது வருங்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.இந்த முயற்சி வெற்றிபெற்றால் வருங்காலங்களில் மாற்றுத்திறனாளி பிள்ளைகள் யாரையும் சார்ந்து இல்லாமல், தங்கள் எதிர்காலத்தை தாங்களே சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும்” என நம்பிக்கையாக பேசுகிறார் அருண்.

– தேவி
படங்கள்: சிவா

The post நம்பிக்கை விதைக்கும் மியூசியம் கஃபே..!! appeared first on Dinakaran.

Related Stories: