செங்குன்றம் -திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

புழல்: செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். செங்குன்றம் -திருவள்ளூர் கூட்டுச்சாலையில் இருந்து செல்லும் திருவள்ளூர் நெடுஞ்சாலை ஆலமரம் பகுதி, அன்னை இந்திரா நகர், காந்தி நகர், பம்மது குளம், கலைஞர் நகர் மற்றும் பொத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை ஈஸ்வரன் நகர், கோணி மேடு, லட்சுமிபுரம், பொத்தூர் வரை செல்லும் சாலைகளில் வழிநெடுகிலும் ஆங்காங்கே மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் மற்றும் மாநகர பேருந்து டிரைவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் இந்த சாலை பகுதிகளில் மின்விளக்கு வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பாடியநல்லூர், நல்லூர், பம்மது குளம் ஆகிய ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் செங்குன்றம் போக்குவரத்து போலீசார் இணைந்து விபத்துகளை ஏற்படுத்துகின்ற வகையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை சிறை பிடித்து மாட்டு உரிமையாளர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் கூறியதாவது: மாநில நெடுஞ்சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் குறுக்கும் நெடுக்குமாக சுற்றித் திரிவதால் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகிறோம். குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும்போது மின்விளக்கு வசதிகள் இல்லாததால் மாடுகள் நிற்பது கூட தெரியாமல் மாடுகள் மீது மோதி படுகாயம் அடைந்து வருகிறோம்.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் புகார்கள் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இனியாவது சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் குறுக்கும் நெடுக்குமாக சுற்றி திரிந்து வரும் மாடுகளை சிறை பிடித்து உரிய நடவடிக்கை எடுத்து உரிமையாளர்கள் மீது அபராத தொகை விதிக்க வேண்டும். அப்படி செய்தால் மாடுகள் சாலைகளில் செல்லாமல் இருக்கும், விபத்துகளும் நடக்காமல் இருக்கும்.

The post செங்குன்றம் -திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: