தென்னை, பாக்கில் ஊடுபயிர்.. நிச்சய லாபம் கொடுக்கும் நிலக்கடலை

கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை, பாக்கு, வாழை, சின்ன வெங்காயம், அவரை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதியைச் சேர்ந்த சில விவசாயிகள் எப்போதும் காலத்தின் போக்கிற்கு ஏற்ப கச்சிதமாக பயிர் செய்கிறார்கள். இவர்கள் அனைத்து பருவங்களிலும் சாகுபடி செய்யும் வகையில் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். தென்னை, பாக்கு போன்ற நீண்ட கால பயிர்கள் செய்தாலும், அதில் ஊடுபயிராக கொத்தமல்லி, பச்சை மிளகாய், நிலக்கடலை போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து லாபம் பார்த்துவிடுகிறார்கள். அந்த வரிசையில் தொண்டாமுத்தூர் விவசாயியான நடராஜ் தென்னை மற்றும் பாக்கு மரங்களுக்கு இடையில் நிலக்கடலை பயிரிட்டு அசத்தி வருகிறரர்.

தொண்டாமுத்தூரில் இருந்து நரசிபுரம் வழியாக வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது நடராஜின் தோட்டம். இங்கு பாக்கு, தென்னை மரங்களுக்கு இடையில் பசுமையாக வளர்ந்து கிடக்கின்றன நிலக்கடலைச் செடிகள். தற்போது அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில் இருக்கும் நிலக்கடலை செடிகளை நமக்கு காண்பித்தவாறே பேச ஆரம்பித்தார் நடராஜன். தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது தென்னை, பாக்கு விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. ஒரு பயிரை அதிகமாக செய்தால், அதற்கு விலை முறையாக கிடைக்காது. பற்றாக்குறை இருந்தால்தான் மார்க்கெட்டில் அதற்கு மதிப்பு இருக்கும். இதனால் தென்னைக்கும், பாக்குக்கும் பெரிய அளவில் வருமானம் கிடைக்காது. மேலும் இந்தப் பயிர்களை சாகுபடி செய்யும்போது ஆட்கள் கூலி, சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு சிக்கல்கள் எழுகிறது. இதனால், சிறு விவசாயிகள் அதிகளவில் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதை மனதில் வைத்துத்தான் தென்னை, பாக்கை மட்டுமே நம்பி இருக்காமல் காய்கறிகள், பருப்பு வகைகளை ஊடுபயிராக சாகுபடி செய்கிறோம்.

எனக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கரில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தென்னையைப் பயிரிட்டேன். அப்போது 27X27 அடி இடைவெளியில் தென்னையை நடவு செய்தேன். தென்னைக்கு இடையில் கடந்த ஜனவரி மாதத்தில் பாக்கை சாகுபடி செய்திருக்கிறேன். 2 தென்னைகளுக்கு நடுவில் ஒரு பாக்குமரம் என இடைவெளி விட்டிருக்கிறேன். பாக்கு பயிரிடும்போது நிலக்கடலையை ஊடுபயிராக சாகுபடி செய்தேன். கடந்த மார்ச் மாதத்தில் 3 ஏக்கர் நிலத்தில் பாக்கை தனிப்பயிராக சாகுபடி செய்தேன். அதில் 7X7 என்ற அடி இடைவெளியில் பாக்கு பயிரிட்டிருக்கிறேன். அதிலும் ஊடுபயிராக நிலக்கடலையை சாகுபடி செய்திருக்கிறேன். தென்னையில் 3 வருடம் வரை ஊடுபயிர் சாகுபடி செய்யலாம். அதன்பிறகு மரம் வளர்ந்து தலைகூடிவிடும். சூரியவெளிச்சம் நிலத்தில் சரியாக விழாது. இந்த சமயத்தில் ஊடுபயிர் செய்ய முடியாது. பாக்கு மர சாகுபடியில் 2 வருடம் வரை தான் ஊடுபயிர் செய்ய முடியும். அதன்பிறகு செய்ய முடியாது.

நிலக்கடலை சாகுபடியைப் பொருத்தவரை நிலத்தை நன்றாக கட்டியில்லாமல் உழுது விதைக்க வேண்டும். அதன்படி நான் 5 முறை டிராக்டர் கொண்டு நன்றாக உழவு செய்தேன். பின்பு தொழுவுரம் இட்டு நிலக்கடலையை விதைத்தேன். ஒரு ஏக்கருக்கு 35 முதல் 40 கிலோ விதைகள் தேவைப்படும். இதனை பொள்ளாச்சியில் இருந்து வாங்கி வந்து விதைத்தேன். ஜி2 ரகம் மற்றும் கதிரி ரகம் ஆகிய இரண்டு வகைகளை நான் பயிரிட்டு இருக்கிறேன். நிலக்கடலை பொதுவாக 120 நாள் வயதுடைய பருப்பு வகை தாவரம். சித்திரை மற்றும் கார்த்திகை ஆகிய இரண்டு பட்டங்களில் இதை விதைக்கலாம். விதைக்கும்போது நிலத்தில் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நன்றாக வேர்பிடித்து வளரும். நிலக்கடலைக்கு வரிசைக்கு வரிசை 30 செ.மீ, செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். மானாவாரி செம்மண் மற்றும் செம்புரை நிலங்களில் விதைப்புக்கருவி கொண்டு விதைக்கும் போது விதையின் அளவு வெகுவாக குறையும். மேலும் மண்ணில் ஈரம் குறைவதற்குள் நாள் ஒன்றுக்கு 4 ஏக்கர் வரை விதைத்து விடலாம். பின்னர், உயிர் தண்ணீர் விட்டு விதைத்து 4-5 நாள் காய விட வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து வாரம் ஒருமுறை நீர் விட வேண்டும். அதிக மகசூல் பெறுவதற்கு களைக் கட்டுப்பாடு அவசியம். விதைத்த 45 நாட்களுக்குள் களைகளை கட்டுப்படுத்துவது அவசியம். களைகளை வளரவிட்டால் மகசூல் வெகுவாக பாதிக்கும். இதில், கம்பளிப்புழு, படைப்புழு, வெட்டுப்புழு, இலைப்பேன், சுருள் பூச்சி, வேரழுகல் நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வேளாண் துறை அதிகாரிகளின் அறிவுரைகளின்படி தகுந்த மருந்துகளைத் தெளிக்க வேண்டும். விளக்குப்பொறி அல்லது இனக்கவர்ச்சி பொறிகளை வயலில் பொருத்துவதால் அந்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதல் மற்றும் மேல்மட்ட இலைகள் மஞ்சளாவது முதிர்ச்சியைக் குறிக்கிறது. அந்த சமயத்தில் அறுவடையைத் துவக்கலாம். கால அளவைப் பொருத்து பயிரை கண்காணிக்க வேண்டும். அறுவடைக்கு முன்பு நீர் பாய்ச்சினால் சுலபமாக அறுவடை செய்ய முடியும். இல்லையென்றால் அறுவடை செய்ய சிரமப்பட வேண்டியிருக்கும்.

நன்றாக பராமரித்தால் குறைந்தது ஒரு ஏக்கருக்கு ஒரு டன் மகசூல் நிச்சயம் கிடைக்கும். இதில் கூடுதலாகவும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஊடுபயிராக செய்வதால் எனக்கு ஏக்கருக்கு 1 டன் உறுதியாக கிடைக்கிறது. 5 ஏக்கருக்கு 5 டன் வரை மகசூல் கிடைக்கிறது. அறுவடை சமயத்தில் மாதம்பட்டி, கரடிமடை பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நேரடியாக எங்களுக்கு வயலுக்கு வருகிறார்கள். அவர்கள் ஒரு கிலோவுக்கு ரூ.40 விலையாக தருவதோடு, நிலக்கடலையை அவர்களே அறுவடை செய்துகொள்கிறார்கள். பின்பு அவற்றை ஊர், ஊராக எடுத்து சென்று விற்பனை செய்துவிடுகிறார்கள். ஒரு கிலோவுக்கு ரூ.40 தருவதன் மூலம் ஒரு ஏக்கரில் இருந்து ரூ.40 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் விதை, களையெடுப்பு, உரம், பூச்சிக்கொல்லி என அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் செலவாகும். மீதி ரூ.20 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. 5 ஏக்கர் நிலத்தில் இருந்து ரூ.1 லட்சம் லாபம் கிடைக்கிறது. தென்னை மற்றும் பாக்கு மரங்களில் இருந்து பின்னாளில் லாபம் கிடைக்கும். அதற்கு முன்னதாக ஊடுபயிர் மூலம் இந்த லாபம் கிடைக்கிறது. இதை மற்ற பராமரிப்பு செலவுக்கு பார்த்துக்கொள்ளலாம்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
நடராஜ்: 98651 47860

The post தென்னை, பாக்கில் ஊடுபயிர்.. நிச்சய லாபம் கொடுக்கும் நிலக்கடலை appeared first on Dinakaran.

Related Stories: